09 September, 2011

பென்குயின் ஒரு காதல் குயின் !



ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும் வெயிட்டான பறவை பென்குயின்! இந்த வெயிட்டான பார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்க முடிந்தும் பறக்க இயலாத பரிதாபமான பறவை. ஆனால் அதிக குளிரை அனாயசமாக தாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை!
ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள்.
ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த பென்குயின்களில் 6 குரூப்புகள் இதில் சக்ரவர்த்தி, ராஜா, நீலம், பாறை, பெரிசுகள் என 17 இனங்கள். எல்லா இனத்துக்கும் மேல்புறம் மிட்நைட் ப்ளூவும், அடிப்புறம் வெள்ளை நிறமாகவும் இருக்கும், தலை, கழுத்தில் உள்ள வித்தியாச நிறங்கள்தான் பென்குயின்களை ஜாதிவாரியாக பிரிக்கிறது. நீலப் பென்குயின்கள்தான் இருப்பதிலேயே குட்டி ரகம். ஒரு அடிதான் அதிகப்பட்சம்! சக்ரவர்த்திப் பென்குயின்கள் ஒரு மீட்டர் உயரம் இருக்கும்!
கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது பெரிய படுதாவைப் போர்த்தியிருக்கும் முகமூடி மனிதன் போல பென்குயின் இருக்கும். குட்டை கழுத்து, கனத்த சரீரம், வால் கூட ஃபார்மாலிட்டிக்கு கொஞ்சுண்டுதான். கால்கள் சிறிதாக, சற்றுப்பின் தள்ளி இருப்பதால் சவ்வோடு கூடிய பாதத்தை ஜிக்ஜாக்கா நடக்கும் போது கொள்ளை அழகாக இருக்கும். பார்க்க ஆந்தைத் தோற்றம் தரும் பென்குயின், புறா குரலில் கத்தும்.
உடல் முழுவதும் வாட்டர் புரூப் சிறகுதான்.கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று லேயர்கள் இதில் இருக்கும். தினசரி 150 கிராம் சிறகுகள் உதிர்த்து, 12 நாட்களில் புதுப்பிக்கப்பட்டுவிடும். உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும் பென்குயின்!
பிடித்த உணவு எது என்று பென்குயினை கேட்டால் சிறிதும் தாமதம் இல்லாமல் சட்டென கடல்மீன்கள்தான் என கூறிவிடும். இதற்காக கடலில் டைவ் அடித்து வெகு ழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்து லபக்கும். 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும். ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால், காலால் இவை நடக்காது.வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங்தான்! பென்குயின்கள் கரையில் எதையும் சாப்பிடாது. பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் வாரக்கணக்கில் கூட கரைக்குத் திரும்பாமல் நீந்துவதுண்டு.
அதிகம் நேரம் நீரிலேயே இருப்பதால் பென்குயின்கள் உடலில் சிறு அழுக்குகூட இருக்காது. எப்பொழுதும் மேக்கப்பில் இருக்கும் கவர்ச்சி நடிகை போல கிளாமராக இருக்கும். இந்த பிரெஷ் தோற்றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு, நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும். காதல் மனைவியைத் தவிர பிற அழகிகளை ஒரு போதும் ஆண் பென்குயின்களை நாடுவதில்லை!
மாலை நேரம் வந்துவிட்டால் குஷி பிறந்துவிடும் பென்குயின்களுக்கு! கடற்கரையில் காலார நடக்கும்போதே காதல் பிறந்துவிடும். காதலனும்,காதலியும் எதிரெதிரே பார்த்தபடி நின்று கொள்ளும். நீண்ட நேர முத்த மழை நடக்கும். முத்தத்துக்குப் பின் வரும் வெட்கம்,அதன் பின் இறக்கைகள் படபடவென்று அடித்து சிக்னல் காட்டும்.பிறகு காதலியின் தலையை தன் சிறகுக்குள் மறைத்து இரண்டறக் கலப்பான் பென்குயின் காதலன்.
காதல் முடியும்வரை டிரெம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டும் எழுப்பிக் கொண்டேயிருக்கும். அதை கேட்டு இணை நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்து மற்ற பென்குயின்கள் வேறு பக்கம் திரும்பிக்கொள்ளும். ஒரு பக்கம் டிரெம்பெட் இசை, மறுப்பக்கம் இறக்கைகளின் விளாசல் இரண்டும் முடிந்துவிட்டால் அது முடிந்துவிட்டது என அர்த்தம். வயிற்றில் ஜனனம் நடந்து, சீசன் வந்ததும், புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் மாநாடு கூடும். முட்டையிடுவதற்குதான்! இளம் பச்சை அல்லது வெள்ளை நிற ஜதை முட்டைகள்.30 முதல் 60 நாட்கள் வரை அடைகாப்பு நடக்கும். கணவனுக்கும் இதில் பங்குண்டு. இருவரும் பாதி பாதி நாட்கள் ஷிப்ட் முறையில் அடைகாக்க வேண்டியதுதான்.அடை காக்கும் நாட்கள் முழுவதும் அன்னா ஹசாரேயாக மாறி அன்ன ஆகாரத்திற்கு நோ சொல்லி விடும். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால் தனது பாதச் சவ்வுகளுக்கு இடையில் முட்டையை வைத்தபடிதான் அன்ன நடை போடும் பென்குயின்களை பார்க்க ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஏகத்துக்கு டூரிஸ்ட்கள்!
ஒரு கொசுரு செய்தி! குட்டி பென்குயின் இறந்துவிட்டால் அடுத்தவரின் குட்டியை அபேஷ் செய்து தன்னுடன் ரகசியமாக சேர்த்துக்கொள்ளுமாம்! அரசு மருத்துவமனையில் நடப்பதுபோல்? இதை தடுப்பதற்கென்றே சிறப்பு தனி பாதுகாப்புப்படையும் பென்குயின்கள் ராஜ்யத்தில் உண்டாம்!

2 comments:

  1. அருமையான தளம் , இன்று தான் பார்க்க நேர்ந்தது , இனி அடிக்கடி வருவேன்

    நன்றி டாக்டர்

    ReplyDelete
  2. வருகை தந்தமைக்கு நன்றி! அடிக்கடி உங்கள் வருகையை எதிர்பாக்கிறோம். அடுத்த தடவை பெயருடன் வந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவோம்

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...