குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!!

குழந்தைக்கு சளியா?  உடனே என்ன செய்வீர்கள்'? கவனிக்காமால்  விட்டுவிட்டால் சளி  நிமோனியாவாக மாறி  மோசமாகிவிடுமோ என்று அலரிப்புடைத்து டாக்டரிடம்  உடனடியாகக் தூக்கிக் கொண்டு ஓடுவீர்கள்.

மருத்துவரும்  சளிக்கான ஏனைய மருந்துகளுடன் பெரும்பாலும் நுண்ணுயிர் கொல்லி மருந்தையும் (Antibiotic) தரக்கூடும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தையாயின் தூசி, புழுதி போன்றவற்றில் விளையாடுவதைத் தவிர்க்கும் படி கூறுவார். 

 
படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி துவைப்பதுடன் நல்ல வெயிலில் காயவைக்கும்படியும் கூறுவார். இவையெல்லாம் படுக்கையில் சேரக் கூடிய தூசிப்பூச்சி போன்ற நுண்ணுயிர்களை அழிப்பதற்காகவே இந்த ஆலோசனை.

அத்துடன் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை குழந்தையின் படுக்கை அறையில் நுழைய விடக் கூடாது,  அவற்றின் ரோமம் ஒவ்வாமையைத் ஏற்படுத்தி  ஆஸ்த்மாவை வரவழைக்கக் கூடும் என்பதற்காகவே மருத்துவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று ஆஸ்த்மா, நாய், நுண்ணுயிர் கொல்லி மருந்து ஆகியன தொடர்பாக புதிய பார்வையை முன்வைக்கிறது. University of Manibota மற்றும் MacGill University in Montreal ஆகியவற்றில் செய்யப்பட்ட ஆய்வு, ஒரு வயது ஆவதற்கு முன்னரே நுண்ணுயிர் கொல்லி மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் ஏழு வயதாவதற்கு முன்னரே ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அதிலும் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் தொடர்புறாத குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும்.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பொறுத்த வரையில் செபலோஸ்போரின் (Cephalosporins)என்ற வகை மருந்தைப் பாவித்த குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகமாகுமாம்.

நாய் பற்றிய ஆய்வுதான் மிகவும் சுவாரிசமானது! நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் குழந்தைகளை அதிலும் முக்கியமாக சளி, ஆஸ்த்மா உள்ள குழந்தைகளை அதிகம் சேரவிடக்கூடாது என்பதே இதுவரை நம்பப்பட்ட கருத்தாக இருந்த்து. ஆனால் இந்த ஆய்வின் முடிவு இக் கருத்திற்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறது!.  நாயுடன்  தொடர்பு இல்லா  குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது  என்கிறது.

காரணம் என்ன? நாயின் உரோமத்தில் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. குழந்தை நாயுடன் தொடர்புறும் போது, அந்த நுண்ணுயிர்கள் குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை இயல்பாக வளர்ச்சியுறுவதற்கு தூண்டி விடுகின்றன. இளவயதிலேயே இவ்வாறு நாயிலிருந்து வரும் நுண்ணுயிர்களுடன் தொடர்புறுவதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி, வலுவடைந்து ஆஸ்த்மா தோன்றுவதைத் தடுக்கிறது என அந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மாறாக நாயுடன் தொடர்புறாத குழந்தைகள் குறைந்தளவு நுண்ணுயிர்களுடனேயே தொடர்புறுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி் வலுவடையாது ஆஸ்த்மாவுக்கு அதிகஅளவில் ஆட்படுகிறார்கள்.

எனவே நீங்கள் செய்யக் கூடியது என்ன? குழந்தையுள்ள உங்கள் வீட்டில் ஒரு நாய் வளருங்கள். நாய்க்கு தடுப்பூசிகள் போட்டு குளிப்பாட்டி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள். நாயை குழந்தை வளரும் இடங்களுக்கு வந்து செல்ல அனுமதியுங்கள். ஆயினும் குழந்தை நாயைச் சீண்டிக் கடிபடாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு, அதிலும் முக்கியமாக ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் வந்தால் அவசரப்பட்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைக் கொடுக்க வேண்டாம். முக்கியமாக மருத்துவர் ஆலோசனை இன்றிக் கொடுக்க வேண்டாம். ஆயினும் சில தருணங்களில் மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இருந்தால் அது செபலோஸ்போரின் வகை மருந்தாக இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு நாயின் ரோமங்களில் உள்ள ஒவ்வாமை தூண்டிகள் ஆஸ்த்மாவை மோசமாக்கலாம்!

Comments

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?