சிரித்து விளையாடும் சிங்கார டால்பின்கள்
நமது நாட்டின் தேசிய கடல்வாழ் விலங்கான டால்பின்கள் எப்போதும் முகம் நிறைந்த புன்னகையுடன் துள்ளிவிளையாடும் பாலூட்டி இனத்தை சேர்ந்தவை.சமுத்திர சாம்ராஜ்ஜியத்தில் படுவேகமாக நீச்சலடிக்கும் பிராணி டால்பின்தான். இவைகளின் உடலமைப்பு வேகமாகவும் , சுழன்று சுழன்று நீந்துவதற்கு ஏற்றவையாக உள்ளது .
டால்பின்கள் சுறாமீன்களின் நெருங்கிய உறவினர் . டால்பின்களில் சாதாரண வகை, கங்கைப்புற வகை என்று இரண்டு வகைகள் உண்டு. இரண்டிலுமே பெண்ணுக்குத்தான் பெரிய உடலமைப்பு. இது தவிர, பாட்டில் மூக்கு டால்பின்,வால் அகன்ற டால்பின் போன்ற சில அரிய வகை எக்ஸ்டிராக்களும் உண்டு. கங்கைப்புற டால்பின்கள் மட்டும் கடலுக்குப் போவதில்லை. கங்கை, பிரம்மபுத்திரா நதிகளோடு சரி!
மனிதனுக்கு அடுத்தபடியாக நிலத்தில் வாழும் பிராணிகளில் அதிக அறிவு வளர்ச்சி பெற்றதாக சிம்பன்சிதான் என கருதப்படுகிறது. கடல் வாழ் ஜீவன்களில் டால்பினுக்குத்தான் அந்த முதல் ரேங்க்! மிக நுட்பமான அறிவு இதற்கு இருக்கிறது. எதையாவது கற்றுக் கொடுத்தால் கற்பூர புத்தியாகப் பிடித்துக் கொள்கின்றன.
இந்த புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி மேலை நாடுகளில் நிறைய எண்டர்டெயின்மென்ட்கள் வந்துவிட்டன. டால்பின்கள் காண்காட்சிகளே, சர்க்கஸ் ரேஞ்சுக்கு சக்கைப்போடு போடுகின்றன. டால்பின்கள் நீர் மேற்பரப்பில் துள்ளி விளையாடுவதையும் , பந்து விளையாடுவதையும் மருத்துவர்கள் மன அழுத்த நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள் .ஆனால் செல்லபிராணிகள் வளர்ப்பதில் கிடைக்கும் பலனை விட இதில் குறைவே எனவும் பல ஆராய்ச்சியாளர்கள் மறுக்கவும் செய்கிறார்கள்.
மனிதனுக்கும் டால்பினுக்கும் இடையே நல்லுறவு பற்றிய சான்றுகள் முதலாம் நூற்றாண்டில் இருந்தே நிறையக் கிடைத்துள்ளன. மனிதர்களோடு மிகவும் நட்பாக பழகும் இவைகள் மனிதர்களை தாக்குவது மிக மிக அரிது . மனிதனோடு பழகவே விரும்புகின்றன. அப்படி ஒரு பூர்வ ஜென்மப் பாசப் பிணைப்பு போலிருக்கிறது. கடலில் தத்தளிக்கும் மனிதனை டால்பின்கள் காப்பாற்றும். இந்த முயற்சியில் டால்பின்களுக்கு இடையே அபூர்வமான ஒற்றுமை காணப்படும். தத்தளிக்கும் மனிதனை சுற்றி நீரில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி சுறா போன்ற ஆபத்தான எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறது. ஏன் சில சமயங்களில் சுறாவிடமே சண்டையிட்டு காப்பாற்றுகிறது. கடலில் ஏதேனும் ஒரு கப்பலைப் பார்த்துவிட்டால், டால்பின்கள் படுகுஷியாகிவிடும். கப்பல் ஒதுக்கித் தள்ளும் அலைகளோடு மகிழ்ச்சி பொங்க விளையாடிக் கொண்டே வெகு தூரம் வந்து டாட்டா சொல்லும்! மீனவர்களுக்கு மீன்கள் மலிந்திருக்கும் பேட்டையைக் கூட டால்பின்கள் சுட்டிக்காட்டுகிறதாம்!
மிக கூர்மையான பார்வைத்திறனும் , தொடு உணர்வும் கொடுத்த ஆண்டவன் இவைகளுக்கு வாசனை உணர்வு கொடுக்காமல் விட்டுவிட்டார். வாசனை உணர்வு இல்லையென்றாலும் டால்பின்கள் தன் அபரிமிதமான சுவை உணர்வை பயன்படுத்தி குறிப்பிட்ட சிலவகை மீன்களை அதிகம் கபாளிகரம் செய்கிறது. ஆனால் மீன்கள் உட்பட கடல் உயிரினங்கள் பலவற்றையும் டால்பின்கள் ஸ்வாகா செய்கின்றன. மிக ஆழத்தில் ஒளிந்திருக்கும் ஜீவன்களைக் கூட இவை விட்டு வைப்பதில்லை. இதற்காக இவை நீருக்கடியில் சில பெக்கூலியர் சத்தங்கள் எழுப்புகின்றன. இந்த ஒலி அதிர்வுகள் எதிரொலித்து மீள்வதைக் கொண்டு இரையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடுகின்றன. இவை கொட்டாவி விடும் போது எட்டிப் பார்த்தால் 70 அழகிய சிறு பற்கள் பளிச்சென தெரியும். இந்த பற்கள் எதிரொலித்து மீள வரும் சத்தங்களை ஈர்க்கும் ஆண்டனாவாக அவதாரம் எடுத்து, தாடையில் உள்ள பிரத்தியேக கொழுப்பு மூலம் சத்தத்தை உள்ளே கடத்துகிறதாம்.
டால்பின்களின் பரம எதிரியான சுறா மீன்களால் தாக்கப்பட்ட மிகப்பெரிய காயங்கள் ஏற்பட்டாலும் இதெல்லாம் இதற்கு ஷுசுபி ! குருதி இழப்பு இல்லாமல் எந்த காயத்தையும் எளிதில் குணப்படுத்திகொள்ளும் அமைப்பை இது பெற்றுள்ளது.
டால்பின்களுக்கு இடையேயான கம்யூனிகேஷன் சிஸ்டம் படு சூப்பராகச் செயல்படுகிறது.இவை ஒன்றுக்கொன்று குயிக்... குயிக் என்று சத்தம் எழுப்பி தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன. கடலில் ஏதாவது புதுப் பொருளைப் பார்த்துவிட்டால் கூட்டம் கூடி, கலந்தாலோசித்து அதை என்ன செய்யலாம் என்று அரசாங்கம் ரேஞ்சுக்கு சிந்தித்து நடவடிக்கை எடுக்கின்றன.
டால்பின்கள் குளிர்காலம் துவங்குவதற்கு சற்று முன்னதாகவே இணை தேடுகின்றன. குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் டால்பின்கள்,இதன் துவக்கமாக கூட்டம் கூடி, கோரசாக குதித்தபடி பாடி மகிழும்.வினோதமான விசில் ஒலி எழுப்பி ஆண் டால்பின் அடிக்கடி தன் காதலியை செல்லம் கொஞ்சும்,நீண்டநேர காதல் களிநடனத்திற்குப் பிறகு கூட்டத்திலிருந்து தனிமையில் ஆக்ரோசமா தழுவிக் கொள்ளும். ஒன்றின் மீது ஒன்று விழுந்து, மல்லாந்து விளையாடும். பின் குறுகிய நேரத்தில் பல முறை கலவி நடந்தேரும் . பெண் டால்பின் பின்புற அடிப்பகுதியில் இரண்டு துளைகள் இருக்கும். இதில் தன்னுடையது எது என தீர்க்கமாக அறிந்து ஆண் டால்பின் ஆதிக்கம் செலுத்திவிடும்.
நீருக்கு வெளியில் பல அடி உயரத்துக்கு எழும்பி ஆனந்தக் கூத்தாடும் டால்பின் ஜோடி, உறவு நேரம் வந்துவிட்டதும் நீருக்கடியில் இருந்து வெளியே எட்டிப் பார்க்காது. எல்லாம் நீருக்கடியில்தான்! டால்பின்களின் உடல் மேல் பரப்பில் நரம்பு மண்டலத்தின் தாக்கம் ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்துவதால் மனிதர்களைப் போலவே இனப்பெருக்கத்திற்கு மட்டும் அல்லாமல் இன்பத்திற்காகவும் கலவி நடைபெறுகிறாதாம் . இவைகளில் மனிதனை மிஞ்சிய ஓரினச்சேர்க்கையாளர்களும் உண்டு .
சேர்க்கை முடிந்ததும் டால்பின்கள் நீரின்மேற்பரப்பில் கண்களை மூடியவாறு வாலை மட்டும் ரிதமாக ஆட்டியபடி தூங்கும்! ஆனால் மூளையின் ஒரு பகுதி மட்டும் விழிப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கும். பின் கோடை பிறக்கும் வரை டால்பின் குட்டி, அம்மா வயிற்றில் வளரும். சுமார் 8-9 மாதங்களுக்குப் பின் சுக பிரசவம். அதுவும் நீருக்கடியில்தான். பிறக்கும் பேபிக்கு ரொம்ப அவசரம், பிறந்த பத்து நிமிடத்தில் நீரின் மேல் மட்டத்து வந்து ஆக்சிஜன் பிடிக்கும். பால் புட்டியை கையில் வைத்துகொண்டு குழந்தையை துரத்தும் தாயை போல் பெண் டால்பின் தன் தாய் பாலை புகட்ட குட்டியின் பின்னாலே ஓடிவந்துவிடும்.
நம் ஊர் மீனவர்கள் வலையில் டால்பின்கள் கிடைத்தால் உடனடியாக விடுதலை செய்துவிடுகிறார்கள். கிரேக்கர்கள் தங்கள் அபிமானக் கடவுளான அப்பல்லோவின் வாகனமாக கருதுவதால் டால்பின்களுக்கு ஏக மரியாதை, கடவுளாவே போற்றப்படுகின்றன. மனிதனை நேசித்து பழகும் இந்த அற்புத ஜீவனை இறைச்சிக்காக சில ஜப்பான் , கொரிய நாட்டு மக்கள் கொன்று குவிக்கிறார்கள். மாட்டின் ஈரல் போன்று டால்பின் இறைச்சி இருக்குமாம்!
No comments:
Post a Comment