Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

04 November, 2020

ஓட்டை பானை!

 குறையா நிறையா?....


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்.தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு

பானைகளை வைத்திருந்தான். அந்தப்

பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி

பெருமை. குறையுள்ள பானையைப்

பார்த்து.எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.


இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.


"ஐயா! என் குறையை நினைத்து நான்

மிகவும் கேவலமாக உணர்கிறேன்.

உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை

நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"


அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா?


உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது

எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய

தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.


அவற்றை வைத்து நான் வீட்டை

அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை

விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. 


அடுத்தவர் பேச்சைப்

பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

02 November, 2020

செல்வம்- வெற்றி- அன்பு

 ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

சாவியும் சுத்தியலும்

 🔴ஒரு குட்டிக் கதை👌


🔴ஒரு நாள் 🔑சாவியை பார்த்து 🔨சுத்தியல் கேட்டது:

நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன்.ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க மிகவும் சிரமப்படுகிறேன்.ஆனால் நீ சுலபமாக திறந்து விடுகிறாயே எப்படி......❓


🔴🔑அதற்கு சாவி சாென்னது:

நீ பலசாலி தான் ஒத்துக்காெள்கிறேன் ஆனால் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்❓


🔴 நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன்.❗


🔵எப்பொழுதும் இதயத்தை தொடுங்கள்.... அன்பால் உலகை ஆளுங்கள் ❗👌

விலை போகும் மகிழ்ச்சி!

 ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. 


கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு 

அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.


வண்ண வண்ண விளக்குகள், 

அழகான நதிகள், 

மரங்கள், 

எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று 

அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.


ஆனால் 

போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.


அது பறந்து போகும் போது 

ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு 

அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? 

அவரிடம் குருவி வழி கேட்டது.


“எனக்கு முழு விபரம் தெரியாது. 

தெரிந்த வரை சொல்கிறேன். 

அதற்கு விலையாக 

நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் 

சரி என்றது. 

குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் 

அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,


அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.

பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,

“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.

பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். 

உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு சிறகுதானே, 

தந்தால் போச்சு என்று 

குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.


இப்படியே அந்தக் குருவி, 

அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு 

குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்

வழி சொன்னவர்களுக்கெல்லாம் 

ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.


முடிவாக, 

அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.


வந்து விட்டோம்.....

வந்தே விட்டோம்......

இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், 

இதென்ன....

ஏன் என்னால் பறக்க முடியவில்லை.


ஐயோ, 

என் உடம்பெல்லாம் கனக்கிறதே.

கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.

பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.


குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.

அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் 

அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.


இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது....?!?!?

மனிய நேயம்

 கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு.


போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.


எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" 


அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர்  வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது  என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன்.  தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய். 


என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த  கடிதத்தை     கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.  யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.


மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து  50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?


மனித நேயம் சாகவில்லை.

01 October, 2016

ஏன் பறக்கமுடியவில்லை?

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.

28 December, 2015

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்.....

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.
கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.
‪எலி‬
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.
எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
‪‎பல்லி‬
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?
அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.
இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
‪‎ஈ‬
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும்.
அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.
இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்.
இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.
‪கொசுக்கள்‬
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.
மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.
எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.
இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.
‪கரப்பான்_பூச்சி‬
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.
அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
‪மூட்டைப்பூச்சி‬
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

26 July, 2015

தொலைபேசியில் ஆபசமாக பேசுபவரா? எச்சிரிக்கை


நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / கா...

Posted by Manimaran on Saturday, July 25, 2015

16 December, 2011

நன்றிகள் பலமுறை சொல்லி - 3ம் பாகம்......................தொடர்கின்றது.

எதிர்பாரா விதமாகவும் தொடராகவும் அமைந்து விட்ட என் தொழில் சார்ந்த ஐரோப்பிய நாட்டு பயணங்களால் தடையாகி போன என் தொடர் நிமித்தம் மன்னிப்பு கேட்டவனாக  இதனை தொடர்கின்றேன்.....
1986-ம் ஆண்டு ஆங்கில தினசரியில் வந்த அந்த விளம்பரம் :  "கால் நடை மருந்துகள் விற்பனை செய்யும் அனுபவமுள்ள ஒரு கால் நடை மருத்துவர் மஸ்கட்டிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை" - படித்தததும் நான் தேட ஆரம்பித்ததது வீட்டிலுள்ள உலக வரைப்பட புத்தகத்தைதான்....! 'மஸ்கட்' என்பதை ஒரு இனிப்பாக மட்டுமே சாப்பிட்டு அனுபவப்பட்ட நான் இந்த பெயரில் ஒரு ஊர் இருப்பதையே அப்போதுதான் அறிய ஆரம்பித்தேன். விண்ணப்பித்தேன்.  அகில இந்தியாவிலிருந்தும் ஒரேயொரு நபரையே தேர்வு செய்வதாக அறியப்பட்ட நிலையில்
5 மாதங்கள் உருண்டோடியதில் விண்ணப்பித்ததே மறந்து போயிருந்த ஒரு நாளில், பம்பாயிற்கு நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லிய கடிதம் ஆச்சரியமாக வந்தது. ரயிலில் பம்பாய் போய் நேர்முகத் தேர்வுக்கு போய் அமர்ந்த போதுதான் தெரிய வந்தது...அகில இந்தியாவிலிருந்தும் மொத்தம் 1400 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்ததில், 300 பேர் அழைக்கப்பட்டிருந்ததில் நானும் ஒருவன் என்பது....! இந்த ஒரே காரணத்திற்காகவே எனக்கு அந்த வேலை கிடைக்காதென்றே ஒரு முடிவு தெரிந்த ஒரு முடிவுக்கு வந்தவனாக நடுக்கமும் பதட்டமும் முற்றிலும் இல்லாதவனாக அறைக்குள் நுழைந்தேன். வழக்கமான கேள்விகளெல்லாம் முடிந்து சம்பிரதாயமான கை குலுக்கள் முடிந்து தேர்வு முடியும் நேரம் நான் அங்கிருந்த 5 நபர்களிடம் ஒரு 2 நிமிடம் எனக்காக ஒதுக்க முடியுமா எனக் கேட்டேன். காரணம்... வளைகுடா நாடுகளில் வெறும் ஒட்டகம் மட்டுமே இருப்பதாக எண்ணியிருந்த எனக்கு அங்கு ஒரு விற்பனைக்காக கால்நடை மருத்துவரை தேர்வு செய்ய ஒரு நிறுவனம் இந்தியா வந்திருந்தது (1986ம் ஆண்டு காலக் கட்டத்தில்) மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் கேள்விகளை ஆரம்பித்தேன்...ஒட்டகம் தவிர என்னென்ன கால்நடைகள், அவைகளின் நோய்கள், மருத்துவ வசதிகள், வாய்ப்புகள், மருத்துவர்கள், மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள்...என என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்ன நபர்களிடம் விடை பெற்று, ரயிலேறி சென்னை வந்து இறங்கினேன். ஒரு பதட்டமுமில்லாதவனாக 'சும்மா' பம்பாய் போய் வந்த அனுபவமாகவே எடுத்துக் கொண்ட எனக்கு ஒரு 10 நாட்கள் கழிந்து  நான் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதாக தந்தி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை..எல்லா ஏற்பாடுகளும் முடிந்து நான் Air India மூலம் மஸ்கட் விமான நிலையத்தில் கால் பதித்த அந்த தினம் 1987 மார்ச் 8ம் நாள். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான Pfizer, Cooper, Beecham, Hoechst, Intervet, Rhone Meriux, SKF தயாரிப்புகளை ஒமான் நாட்டின் கால்நடை (பசு, கோழி, ஆடு, ஒட்டகம்) பண்ணைகளில் விற்பனை செய்யும் பணி. புதிய சூழ்நிலைகள் ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மேற்படி நிறுவனங்கள் விற்பனை பயிற்சிகளுக்காக அழைத்ததால் என்னை France, Cyprus, Germany, UK என பயணிக்க வைத்தது. என் குடும்பமும் என்னை வந்தடைய, மஸ்கட்டில் என் வாழ்க்கை ஒரு சீரான, தொடராக 4 ஆண்டுகளை பின் தள்ளி 1991ம் ஆண்டினுள் அடியெடுத்த வைத்த ஒரு நா ளில், நான் என் நிறுவன மேலாலரிடன் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன்........................

தொடரும்.....      இதற்கு முந்தைய பகுதியை படிக்க...

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...