08 November, 2020

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை


கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்

4சுழி 5சுழி போட்டானாம்! 

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 

4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?


இது எப்படி இருக்கு? 


தமிழ் எழுத்துகளில் -

ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 

மூனுசுழி ண என்பதும் தவறு!


ண இதன் பெயர் டண்ணகரம்,

ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.


மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)


தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)


இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)


வேற மாதிரி சொன்னா 

இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 

(வர்க்க எழுத்து-ன்னா, 

சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)


இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 

இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 

எழுத்துப் பிழையும் குறையும். 


எப்புடீ?


மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.

ஏன்னா அது டண்ணகரம்.


கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.

ஏன்னா அது றன்னகரம். 


இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்

ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 

வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)


இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 

நெனைக்கிறவங்க மட்டும்

தொடர்ந்து படிக்கலாம். 

(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 

அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)


நல்ல உச்சரிப்புக்கு..

செய்தியாளர் ஷோபனா ரவி

தமிழில் எந்த எழுத்தின்  பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண  எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 


தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.

இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)

இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?


உதாரணமாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.


உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்


இதை எல்லாரும் படித்திருப்போம்-

வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)  இதுவும் தெரிஞ்சதுதான்.


எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.


சொற்களில், மெல்லினத்தை அடுத்து 

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)


க ங – எங்கே – ங் க 

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப


இடையின ஆறெழுத்தும் 

அவற்றின் பெயருக்கேற்ப 

(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 

மென்மையாகவும் இன்றி இடையினமாக) 

செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற


அவ்வளவு தாங்க...


உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ 

ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!

நெட்டை னா குட்டை

பள்ளம் னா மேடு

தொப்பை னா சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)


ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?

முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.


இதே மாதிரித்தான் -

சின்ன ர என்பதும் தவறு!

பெரிய ற என்பதும் தவறு! 


ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது 

- மரம், கரம், உரம்


ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி 

- மறம், அறம், முறம்


இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!


வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் 

இடையில வர்ரது இடையினம்.


அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...


வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)


வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...


இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான் ! 


இதே மாதிரித்தான் 

உயிரெழுத்தில் 

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

 ஐ-இ  

ஒ-ஓ - என வரும இன  எழுத்துகள் 

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை 

(ஓசை ஒழுங்கு) அறிந்து 

எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும், 

படிப்பவர் நினைவில் நிலைக்கும்.


04 November, 2020

ஓட்டை பானை!

 குறையா நிறையா?....


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்.தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு

பானைகளை வைத்திருந்தான். அந்தப்

பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி

பெருமை. குறையுள்ள பானையைப்

பார்த்து.எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.


இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.


"ஐயா! என் குறையை நினைத்து நான்

மிகவும் கேவலமாக உணர்கிறேன்.

உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை

நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"


அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா?


உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது

எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய

தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.


அவற்றை வைத்து நான் வீட்டை

அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை

விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. 


அடுத்தவர் பேச்சைப்

பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

02 November, 2020

செல்வம்- வெற்றி- அன்பு

 ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

சாவியும் சுத்தியலும்

 🔴ஒரு குட்டிக் கதை👌


🔴ஒரு நாள் 🔑சாவியை பார்த்து 🔨சுத்தியல் கேட்டது:

நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன்.ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க மிகவும் சிரமப்படுகிறேன்.ஆனால் நீ சுலபமாக திறந்து விடுகிறாயே எப்படி......❓


🔴🔑அதற்கு சாவி சாென்னது:

நீ பலசாலி தான் ஒத்துக்காெள்கிறேன் ஆனால் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்❓


🔴 நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன்.❗


🔵எப்பொழுதும் இதயத்தை தொடுங்கள்.... அன்பால் உலகை ஆளுங்கள் ❗👌

விலை போகும் மகிழ்ச்சி!

 ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. 


கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு 

அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.


வண்ண வண்ண விளக்குகள், 

அழகான நதிகள், 

மரங்கள், 

எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று 

அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.


ஆனால் 

போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.


அது பறந்து போகும் போது 

ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு 

அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? 

அவரிடம் குருவி வழி கேட்டது.


“எனக்கு முழு விபரம் தெரியாது. 

தெரிந்த வரை சொல்கிறேன். 

அதற்கு விலையாக 

நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் 

சரி என்றது. 

குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் 

அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,


அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.

பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,

“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.

பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். 

உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு சிறகுதானே, 

தந்தால் போச்சு என்று 

குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.


இப்படியே அந்தக் குருவி, 

அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு 

குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்

வழி சொன்னவர்களுக்கெல்லாம் 

ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.


முடிவாக, 

அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.


வந்து விட்டோம்.....

வந்தே விட்டோம்......

இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், 

இதென்ன....

ஏன் என்னால் பறக்க முடியவில்லை.


ஐயோ, 

என் உடம்பெல்லாம் கனக்கிறதே.

கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.

பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.


குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.

அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் 

அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.


இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது....?!?!?

மனிய நேயம்

 கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு.


போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.


எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" 


அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர்  வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது  என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன்.  தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய். 


என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த  கடிதத்தை     கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.  யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.


மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து  50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?


மனித நேயம் சாகவில்லை.

அழகியும் குருடனும்

 ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான்.  அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.

இவ்வாறிருக்க 

ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு  படிப்படியாக குறைவடையத் தொடங்கியது.  அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.

அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்ததை  கேட்டு மனைவி வேதனை அடைந்தாள்!


ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி  அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.


நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.


அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.

அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.

அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.


தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.


அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர்   அவனை அழைத்து

"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்? 

எனக் கேட்டான். 


அதற்கு அவன்

நான் குருடன் இல்லை.  எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன். 

அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.

அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" 

எனப் பதிலளித்தான்.

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...