நம் வீட்டு எலி நமக்கு எமன்?கொசுவால், சிக்குன் குனியா வந்து பாடாய் படுத்தி விட்டது; அடுத்து, பன்றிகளால் பன்றிக்காய்ச்சல் வந்து, இன்னும் விட்டபாடில்லை. ஏற்கனவே, கோழிகளால் பறவைக் காய்ச்சல் வந்து, இந்தியா உட்பட பல நாடுகளை பயமுறுத்திச் சென்று விட்டது.

செத்த எலிகளால், பிளேக் என்ற கொடிய நோய் இந்தியாவில், சூரத் நகரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பலர் பலியாயினர். ஆனால், உயிருள்ள எலிகள் மூலம் கொடிய நோய்கள் வருகிறது என்பது புதிய செய்தி!

எலி ஜுரம் (லெப்டோஸ்பைரோஸிஸ்) மற்றும் ஒரு வித வைரஸ் காய்ச்சலும் எலிகளால் ஏற்பட்டு பல ஆண்டுகளாக மனித உயிரை பறிக்கிறது. எனவே அவைகளை பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

எலி ஜுரம் (லெப்டோஸ்பைரோஸிஸ்)

லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்ஸ் என்ற சுருளி வடிவ பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சலாகும். பொதுவாக, மிருகங்களைத் தாக்கக்கூடிய இந்த நோய், மனிதர்களையும் தாக்கக்கூடும். சிலருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல்போல், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல் சரியாகிவிடும். ஒரு சிலருக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

மனிதர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்.

* பாக்டீரியவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் நமது உடலில் குறிப்பாக தோலில்

படும்போது, வெட்டுக்காயம், சிராய்ப்புகள் வழியாகவும், கண்கள் மூலமாகவும் உடலுக்குள் கிருமிகள் நுழைந்துவிடும்.

* கிருமிகள் கலந்த தண்ணீரில் நீண்டநேரம் இருக்க நேரிட்டால், வெட்டுக் காயமோ, சிராய்ப்புகளோ

இல்லாவிட்டாலும்கூட தோல் வழியே கிருமிகள் உள்ளே சென்றுவிடும்.

* பாக்டீரியா கிருமிகள் கலந்த தண்ணீரைக் குடித்தாலும், கிருமிகள் கலந்த காற்றைச் சுவாசிப்பதாலும் நோய் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதாலும் நோய் பரவும்.

கிராமப் பகுதிகளில் மாடுகள், பன்றிகள் போன்ற விலங்குகளிடம் இருந்தும், நகர்ப்புறங்களில் எலி மற்றும் நாய்களில் இருந்தும் மனிதர்களுக்கு இந்தக் கிருமிகள் பரவி நோயை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இந்த பாக்டீரியா கிருமிகள் பரவாது என்கிறார்கள்.

இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில், இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது. ஏனென்றால், அதிக வெப்பமான தட்பவெப்ப நிலை, கிருமிகள் நீண்ட நேரம் உயிருடன் இருக்க உதவுகிறது.

நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்

* கால்நடை மருத்துவர்கள்

* சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிகள்

* கசாப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்

* விவசாயிகள்

* சுரங்கங்களில் வேலை செய்பவர்கள்

* நீச்சல் வீரர்கள் மற்றும் ஏரி, குளம் போன்ற தேங்கிய நீர்நிலைகளில் மீன் பிடிப்பவர்கள்

* தகுந்த சுகாதாரம் இல்லாமல் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள்.

பாக்டீரியா கிருமிகள் உடலுக்குள் நுழைந்த ஏழு முதல் பன்னிரெண்டு நாள்கள் கழித்த நோயின் அறிகுறிகள் தென்படும். இருவேறு பருவங்களாக நோய் வெளிப்படும். முதல் வாரத்தில், நோயின் அறிகுறிகள் குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண்

கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும்.

பொதுவாக, பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் குறைவாக இருக்கும்.அதன்பிறகு, சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருக்கும்.

இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் தாக்குவதால் பாதிப்பு ஏற்படும். சுமார் 4 முதல் 30 நாள்கள் வரை நோயின் அறிகுறிகள் நீடிக்கும்.

கல்லீரலும், சிறுநீரகமும் அதிகமாகப் பாதிக்கப்படும்.

மஞ்சள் காமாலை வருவது ஓர் அபாய அறிகுறியாகும். அத்தகைய நோய்க்கு வீல்ஸ் நோய் என்று பெயர். இவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படலாம். மேலும் மூளைக் காய்ச்சல், கண்களில் பாதிப்பு போன்றவையும் ஏற்படலாம்.

பரிசோதனை

நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள், மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் ரத்தப் பரிசோதனைகளும், சிறுநீர்ப் பரிசோதனைகளும் செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள நீரை எடுத்தும் பரிசோதனை செய்யவேண்டும்.

சிகிச்சை

* பெனிசிலின் போன்ற மருத்துகளை நோயின் ஆரம்ப நிலையிலேயே கொடுக்கவேண்டும்.

* ரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

* சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு ரத்தச் சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) செய்யவேண்டும்.

தடுக்கும் முறைகள்

1. எலி ஜுரத்தில் தப்பிக்கும் முதல் தடுப்பு நடவடிக்கையாக எலிகளை ஒழிக்கவேண்டும்.

2. விலங்குகளுடனோ அல்லது விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களில்

வேலை செய்பவர்கள், உடல் முழுவதும் மூடக்கூடிய உடைகளை அணிய வேண்டும்.

3. கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.

4. நோய் பரவும் இடங்களில் வசிப்பவர்களும், நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களும்

முன்னெச்சரிகையாக மருந்துகளை முதலிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து

ஹண்டா வைரஸ்?’

இந்த நிலையில், நம்மை பயமுறுத்த வருகிறது எலிகளால் வரும் ஒரு வித வைரஸ் காய்ச்சல். போதுமான சிகிச்சை பெறாவிட்டால், 70 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்தில், மும்பையை சேர்ந்த செம்பூரில் வசிக்கும் ஜியோத்சனா என்ற வயது 21 பெண், தொடர்ந்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்; வாந்தி, மயக்கம், தலைசுற்றல், மூச்சுதிணறல் என்று அடுக்கடுக்காக கோளாறுகள் தொடர, கடைசியில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போனதால், சிறப்பு நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் பரிசோதித்ததில் ஜியோத்சனாவின் ரத்த சிவப்பு அணுக்கள் அளவு வெகுவாக குறைந்து வருவதை கண்டுபிடித்தனர்.
அதிர்ந்து போன டாக்டர்கள்,அவருக்கு புதிய ரத்தம் செலுத்தும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், அவருக்கு மாற்று ரத்தம் செலுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்தது. அவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, அதன் ஆய்வு முடிவுகள், வெளிநாட்டு நிபுணர்கள் பார்வைக்கு அனுப்பியபின் தான் புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது. அவருக்கு பாதித்திருப்பது , “ஹண்டா வைரஸ்என்ற எலிகள் மூலமாக, பரவும் வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், குணம் தெரிய ஆரம்பித்தது. இந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், வைரஸ் தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், 70 சதவீத நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இன்னும் இது பரவவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப் பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் ஆபத்து உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதென்ன, “ஹண்டா வைரஸ்?’ எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் தான் இந்த வைரஸ் பரவுகிறது.
* நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜையில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும்.
* நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும்.
* இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, “ஹண்டா வைரஸ்தொற்றும்.
* சுவாசமண்டலத்தைத் தான் இது முதலில் பாதிக்கும்; தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பாதிப்பு ஏற்படும்.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவது மிக மிக குறைவு தான் என்றாலும்; நீண்ட நாள் பூட்டியிருந்த இடங்களில் இந்த வைரஸ் பரவி இருக்கும். பலவீனமானவர்களுக்கு உடனே தொற்றும் ஆபத்து உள்ளது. எனவே, ஆரோக்கியம் காப்பாற்றப்பட வேண்டுமானால், சுற்றுச்சூழலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை தூக்கியெறிந்து, எலிகள் இல்லாமல் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே இது போன்ற நோய்கள் வராமல் தவிர்க்கலாம். பிள்ளையாரின் செல்ல எலிகள் தற்பொழுது எமனின் ஏஜண்டாக மாறி பல உயிர்களை கொல்லும் ஏவளாக மாறி உள்ளதால் எலிகளிடம் எச்சரிக்கை அவசியம் ஆகிறது.

Comments

  1. விழிப்புணர்வு பதிவு .பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வீட்டில் வளர்க்கும் நாய்கள் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்.

    ReplyDelete
  3. வீட்டில் வளர்க்கும் நாய்களிடம் நாம் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தெரிய படுத்துங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?