01 October, 2011

ஏண்டா பக்கியாட்டம் அலையறே ? இது ஒரு பறவையை பற்றியது!



ஒரு பொருள் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக ‘லோ லோ’ என்று அலைபவனை “ஏண்டா பக்கியாட்டம் அலயறே ?” என்று கேட்பார்கள்.
பக்கி என்றே ஒரு பறவை உண்டு. அதுதான் ஆங்கிலத்தில் நைட்ஜார் (Nightjar) என்றழைக்கப் படும் பறவை. இதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மற்றுமொரு பெயரும் உண்டு. தமிழில் பாதுகைக் குருவி என்றும் ஆங்கிலத்தில் கோட் ஸக்கர் (Goat sucker) என்றும் இதனை அழைக்கின்றனர்.
விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப்பட்ட பெயர் கேப்ரிமல்கஸ் ஏஷியாடிகஸ் (Caprimulgus asiaticus) என்பதாகும். கேப்ரிமல்கஸ் என்றால் லத்தீன் மொழியில் ஆட்டுப் பால் உரிஞ்சி என்று பொருள்.


பக்கி பகலில் படுத்துறங்கி இறவில் வெளிக் கிளம்பும் விட்டில் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் ஒரு பறவை. பறந்து கொண்டு இருக்கும் போதே பூச்சிகளைப் பிடிக்க லாயக்காக அகலமான வாயினையும், அலகின் இரு பக்கங்களிலும் பூனைக்கு மீசை முளைத்திருப்பதைப் போன்ற ரோமங்களையும் கொண்டது பக்கி.

இரவில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உட்கார்ந்திருக்கும் இப் பறவையின் கண்கள் காரின் விளக்கு வெளிச்சத்தில் சிவப்பு ஆபரணக் கற்கள் போன்று பிரகாசிக்கும். காரின் விளக்கு ஒளியில் தென்படும் விட்டில் பூச்சிகளை பறந்து சென்று பிடித்துத் தின்னும். அவ்வாறு ரோடின் குறுக்கே பறந்து செல்லும் போது சில சமயம் காரில் அடிபட்டு விழுவதும் உண்டு.


இப்பறவை படுத்துறங்குவது ஆற்றுப் படுகைகளிலும், தரிசல் காடுகளிலும் காணும் செடிகளின் அடியிலோ அல்லது மரக் கிளைகளிலோ. அப்படிக் கிளைகளில் உறங்கும் போது மற்ற பறவைகளைப் போல குறுக்கு வாட்டில் உட்காராமல் நீள வாட்டில் உட்கார்ந்து தூங்கும். ஏன் தெரியுமா? ( இதற்கு பைல்ஸ் என்று சொல்லிவிடவேண்டாம்!) அப்பொதுதானே மரப் பட்டையோடு ஒன்றி விடும் பக்கி, மரக்கிளையில் உட்கார்ந்திருப்பது அதன் எதிரிகளுக்குத் தெரியாது.

உறக்கம் என்றால் ஆழ்ந்த நித்திரை அல்ல. இதன் கண் இமைகள் முற்றிலுமாக மூடி இருக்காது. சிறிய கீற்றாகத் திறந்திருக்கும். இவ்வாறு ஆழ் நித்திரை இன்றி உறங்குவதால் அருகில் சத்தமோ எதிரிகளோ நெருங்கினால் கிட்ட வரும் வரை அசைவின்றி இருக்கும் பக்கி திடீரெனப் பறந்து செல்லும்.

கருப்பு, கரும் பழுப்பு, பழுப்பு, வெளிர் பழுப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் கொண்ட இதன் சிரகுகள் இது வாழும் சுற்றுப் புரத்தோடு ஒன்றி விடுவதால் இதனைக் கண்டு பிடிப்பது மிகக் கடினம். தனது மாய்மாலத்தில் கொள்ளை நம்பிக்கை பக்கிக்கு. அதனால் தான் நாம் கிட்ட நெருங்கும் வரை பறப்பதில்லை.

   குஞ்சுகள் தனது இறக்கைகளை பட படவென அடித்தது, “அம்மா....அம்மா.... எழுந்திரு. யாரோ நம்மை நோக்கி வருகிறார்” என்று பதைத்தாலும் தாய்ப் பறவையோ, “கவலைப் படாதே. நாம் இருப்பது யாருக்கும் தெரியாது” என்பது போல் அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்.ஆனால் சிறிய சப்தம் கேட்டாலும்  பக்கி உடனை பறந்துவிடும்.


படுத்து உறங்கும் போது கவிழ்த்துப் போடப்பட்ட பாதுகை எனக் காணப் படுவதால் இதன் பெயர் பாதுகைக் குருவி என வந்திருக்க வேண்டும்.
நைட்ஜார் என்ற பெயர் ஒருகாரணப் பெயராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது இரவில் எழுப்பும் ஒலியான “சக்...சக்...சக்...சர்ர்ர்…” என்பது காதுக்கு நாராசமாக (jarring sound) இருக்கும்.

இரவு நேரங்களில் விட்டில் பூச்சிகளைத் தேடி ஆட்டுத் தொழுவங்களில் பறப்பதால் மேலை நாட்டவர் இப்பறவை ஆடுகளின் பாலை உரிஞ்சிக் குடிக்க வருவதாக எண்ணி இதற்கு ஆட்டுப் பால் உரிஞ்சி (Goat sucker) என்று பெயர் சூட்டினர்.

பக்கிகள் ஒரு வருடம் வயது ஆனவுடன் வயதுக்கு வந்துவிடும். பாதுகாப்பான இடமும், போதிய உணவும் கிடைக்கிறது என்பதை உறுதி படுத்திக்கொண்டு ஜூன் -ஜூலை மாதங்களில் காதல் வசப்பட்டு ஆண் பக்கியும் பெண்பக்கியும் இணைந்து பெண் பக்கி இரண்டு முட்டைகளை இட்டு  18 நாட்கள் அடைகாத்து குஞ்சுகளை பொரிக்கும். இந்த காலத்தில் உணவு வழங்கும் பொறுப்பை ஆண் பக்கி ஏற்றுக்கொள்கிறது.

பக்கி பற்றிய ஒரு கூடுதல் விசேஷத் தகவல்:-
மண்ணை மண்வெட்டியால் வெட்டும்போது சில சமயம் மண்ணுக்கடியில் சில மாதங்களாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் தவளையைக் காணமுடியும். அதே போல வட அமெரிக்காவில் வாழும் பக்கிகள் குளிர் நாட்களில் சுமார் மூன்று மாதங்கள் ஒரு வித சலனமும் இன்றி சிறு பள்ளங்களில் தூங்குமாம். அப்போது அவற்றின் எடையில் 28 கிராம் கொழுப்பு மட்டுமே குறையுமாம்.நாம் எத்தனை நாள் பட்டினி இருந்தாலும், பக்கியாட்டம் அலைந்தாலும் நமது கொழுப்பு குறையமாட்டிங்கிறதே?


1 comment:

  1. பக்கி பற்றிய ஒரு கூடுதல் விசேஷத் தகவல்:-
    மண்ணை மண்வெட்டியால் வெட்டும்போது சில சமயம் மண்ணுக்கடியில் சில மாதங்களாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் தவளையைக் காணமுடியும். அதே போல வட அமெரிக்காவில் வாழும் பக்கிகள் குளிர் நாட்களில் சுமார் மூன்று மாதங்கள் ஒரு வித சலனமும் இன்றி சிறு பள்ளங்களில் தூங்குமாம். அப்போது அவற்றின் எடையில் 28 கிராம் கொழுப்பு மட்டுமே குறையுமாம்.நாம் எத்தனை நாள் பட்டினி இருந்தாலும், பக்கியாட்டம் அலைந்தாலும் நமது கொழுப்பு குறையமாட்டிங்கிறதே?

    அருமையான தகவல் பகிர்வுகள் சுவாரஸ்யம். பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...