26 October, 2011

நீங்கள் வித்தியாசமானவரா? இதை செய்யுங்கள்!

மிக அவசரம். இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O - ரத்தம் தேவை. உடனே தொடர்பு கொள்ளுங்கள், முருகன் - 99999 99999. என்ற செய்தி கிடைக்கப்பெற்றால், எவ்வளவோ அவசியமில்லாத செய்திகளையெல்லாம் forward செய்கிறோம். இந்த செய்தியையும் forward செய்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்படும்.என்ற நல்ல என்னத்தில் நாமும் செய்தியை பலருக்கும் அனுப்புகிறோம்.


இப்படி ஒரு அனுபவம் அநேகமாக நம்மில் எல்லோருக்குமே வந்திருக்கும். நாமும், குழந்தையின் உயிர் காப்பாற்ற பட வேண்டுமே என்ற பதட்டத்துடனும்,  நல்ல காரியம் செய்கிறோம் என்ற எண்ணத்துடனும், நமக்கு தெரிந்த எல்லோருக்கும் நமக்கு வந்த செய்தியை அனுப்பி வைப்போம். நம்மை போலவே நாட்டில் கருணை மனது கொண்டவர்கள் அநேகம் பேர் இருப்பதால், அந்த குறுஞ்செய்தி அணு வெடிப்பின் பரவலைப் போல சில மணித் துளிகளிலேயே லட்சக்கணக்கான மனிதர்களை சென்றடைகிறது. 

சுமார் ஏழு கோடி பேர் இருக்கும் தமிழகத்தில், ரத்ததானம் செய்யும் வயதும் தகுதியும் உடைய, குறிப்பிட்ட ரத்த வகையை சேர்ந்தவர்களில் சுமார் பத்தாயிரம் பேரை அந்த குறுஞ்செய்தி சென்றடைவதாக வைத்துக் கொள்வோம். கொலை குற்றவாளியானாலும் மரண தண்டனை தரக் கூடாது என்ற காந்திய மனம் கொண்ட நாம், குழந்தைக்கு ஆபத்து என்றால் சும்மா இருப்போமா?. "நானும் குறிப்பிட்ட அந்த ரத்த வகையை சேர்ந்தவன் தான். உங்கள் குழந்தையை காப்பாற்ற நான் இருக்கிறேன். இரத்தத்தை எங்கே வந்து தர வேண்டும்?" என்று கேட்க இதில் பாதி பேர் முருகனை தொடர்பு கொண்டாலும் கூட, அவர் நிலையை நினைத்துப் பாருங்கள்.

உண்மையில், ரத்தம் தேவைப்படும் அந்த குழந்தை  சென்னையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியிலிருந்து ஒரு நண்பர் ரத்தம் தர முன் வரக்கூடும். (இது பரவாயில்லை. விசாகப்பட்டினம், மும்பை, திருவனந்தபுரம் இங்கிருந்தெல்லாம் கூட அழைப்புகள் வரும். மாநில எல்லைகள் கருணை மனக் குறுஞ்செய்திக்கு கிடையாது). அவரிடமிருந்து ரத்தம் பெறுவது என்பது யதார்த்தத்தில் சாத்தியமில்லாத விஷயம்.

உதவும் எண்ணம் உள்ள நண்பர்களே, இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். முதலாவது குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்று உதவ எண்ணும் அன்பர்களுக்கு, இப்படி ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால், முதலில் அதிலிருக்கும் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இப்போது ரத்தம் தேவையா என்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள். இதில் பெரும்பாலான எண்கள் அணைத்து வைக்கப் பட்டிருக்கும்.(பின்னே, ஒரே நாளில் ஐயாயிரம் பேர் phone செய்தால் மனுஷன் என்ன ஆகறது.) தேவை என்பது  உறுதியானால் மட்டுமே forward செய்யுங்கள்.


இரண்டாவது விஷயம், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு. உங்களுக்கு தேவைப் படும் ரத்தம் பெரும்பாலும் உங்கள் ஊர் அரசு மருத்துவமனையிலேயே இருக்கும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் என்றால், கட்டமைப்பு வசதி கொண்ட பெரிய மருத்துவமனைகளில் இருக்கும்
ரத்த வங்கிகளிலும், சிறிய மருத்துவமனை என்றால் தனியார் ரத்த வங்கிகளிலும் உங்களுக்கு தேவையான வகை ரத்தம் கிடைக்கும். (இங்கல்லாம் கிடைச்சா எதுக்கு message அனுப்பறோம்,
அப்படின்னு சொல்றீங்களா? நியாயம் தான்.)  
இதிலெங்கும் ரத்தம் கிடைக்கவில்லை என்னும் சூழலில்,  நம்மை சார்ந்த உறவினர்களிடம், நண்பர்களிடம், Lions club, Rotary club போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் முயற்சித்துப் பார்க்கலாம். அங்கும் கிடைக்கவில்லை என்றால், வேறு வழியே இல்லை. Message அனுப்பிவிட வேண்டியது தான். ஆனால் message அனுப்பும் போது அவசியம் குறிப்பிட வேண்டியது, தேவைப்படும் ரத்த வகை, ரத்தம் தேவைப் படும் இடம் (ஊர், மருத்துவமனைப் பெயர்), எந்த தேதியில் தேவை (இதை குறிப்பிடவில்லை என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்காவது அழைப்பு வந்து கொண்டே இருக்கும்), தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை மறக்காமல் தெளிவாக குறிப்பிடுங்கள். இதன் மூலம் காலம் கடந்த செய்திகள் பரப்பப்படாது. தொலை தூரத்து ஊர்களை சார்ந்தவர்கள் தொடர்பு கொள்ள
மாட்டார்கள். இதனால் கணக்கற்ற அழைப்புகள் கட்டுப் படுத்தப்படும்.


Message அனுப்பி இரத்தம் கிடைக்குமா என பதட்டத்தோடு காத்திருப்பதை விட, உடனடியாக ரத்தம் கிடைக்க எளிதான வழி ஒன்று சொல்லட்டுமா?


ரத்தம் எதுவும் தேவைப் படாமல், சாதாரணமாக நாம் இருக்கும் சூழலிலேயே, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ரத்த வகையினை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ரத்த வகைக்கும், அதே ரத்த வகையை சேர்ந்த, குறைந்தது ஐந்து நபர்களையாவது உங்கள் நலன் விரும்பும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிலிருந்து தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த விவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலை  குடும்பத்தில் எல்லோருக்கும் தெரியும்படி பொதுவில் வையுங்கள். அவசர காலங்களில் குடும்பத்தில் யாரோ ஒருவர் பாதிக்கப் பட்டாலும், மற்றவர்களால் அந்த
பட்டியலிலிருக்கும் பாதிக்கப்பட்டவரின் ரத்த வகையை சார்ந்த நண்பரோ உறவினரோ உடனடியாக தொடர்பு கொள்ளப்படுவார். அவசியமான, அரிதான ரத்தம் உடனடியாக கிடைக்கும், பதட்டம் எதுவும் இல்லாமலே.
-நன்றி ரசிகன்

3 comments:

 1. நானும் 2,3 முறை எனக்கு வந்த இதுபோன்ற SMSயை உறுதி படுத்தாமல் பலருக்கு அனுப்பியுள்ளேன்...
  இனி மாற்றிக்கொள்கிறேன்... நண்பரே...

  நல்ல தகவல்... அனைவரும் சிந்திக்கும் வண்ணம் சிறப்பாக பதிவை உருவாக்கிய ரசிகனுக்கு வாழ்த்துகள்...

  பதிவை படித்ததோடு விடாமல் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு... நன்றி... நண்பரே...

  ReplyDelete
 2. உங்கள் ஊக்கத்திற்கும், சமூக அக்கறைக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 3. மிக மிகச் சரியான பார்வை நண்பரே..

  நானும் எனக்கு வந்த sms படித்தவுடன் தெரிந்த அனைவருக்கும் sms அனுப்பி, அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்கையில் அந்த நம்பர் switch off செய்யப்பட்டிருந்தது.

  விழிப்புணர்வினை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...