மண்ணிற்கும் மனிதர்க்கும் உரம் சேர்க்கும் மண்புழு !


 அதிக அளவில் ரசாயன உரங்களை பயிர்களுக்கு மற்றும் பழ வகை மரங்களுக்கு பயன்படுத்துவதால் இதன் ரசாயண படிமம் விளைபொருட்களில் சேர்ந்து அவைகளை உண்ணும் நமக்கு தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்துகிறது என ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். எனவே இயற்கையில் கிடைக்கும் தொழு எரு, தழை எரு ஆகியவற்றை பயன்படுத்துவது நிலத்திற்கும், பயிர்களுக்கும் ஏற்றது. இந்த எருவிற்கு ஒப்பாக அல்லது அதை விட அதிகமாக கருதப்படும் மண்புழு உரத்தை நாமே தயாரித்து பயிருக்கு இடலாம் அல்லது நல்லமுறையில் பேக் செய்து நகரபகுதியில் காய்கறி பயிரிடுவோர்களுக்கும் பூஞ்செடி வளர்ப்போர்களுக்கும் விற்றுவிடலாம்.

கால்நடைகளை வளர்ப்போர் தங்களுக்கு கிடைக்கும் சாணத்தை மற்றும் இழை, தழை ,குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி  ‘ போர்ன்விட்டா போன்று அருமையான மொறுமொறு கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். மண்புழு உரம் தயாரிக்க சில வகை மண்புழு இனங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன.
மண்புழு தேர்வு
இந்த வகையில் மண்புழு உரம் தயாரிக்க தேர்வு செய்யப்படும் மண்புழுவானது, அங்ககப்பொருட்கள் என்னும் இயற்கை கழிவுகளை சாப்பிடும் திறன், விரைவான வளர்ச்சி, குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் திறன் ஆகிய குணங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த குணங்களை எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை சேர்ந்த மண்புழுக்கள் கொண்டுள்ளன. இவற்றை கொண்டு குழி முறையில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம்.

குழிமுறை
குழிமுறையில் மண்புழு எரு தயார் செய்ய வீட்டு புழக்கடை அல்லது தோட்டத்தில் சமன் செய்யப்பட்ட நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடம் மழைநீர் தேங்காத, சூரிய ஒளிபடாத நிழல் பகுதியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில், 180 செமீ நீளம், 90 செமீ அகலம், 30 செமீ ஆழம் உள்ள குழியை தயார் செய்ய வேண்டும். குழிகளில் எறும்பு மற்றும் கரையான் பிரச்சினையை தவிர்க்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் குளோர்பைரியாஸ் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். 

மருந்து தெளித்து பதினைந்து தினங்களுக்குப் பிறகு எரு படுக்கைகள் அமைக்க வேண்டும். எரு படுக்கைகளுக்கு தேவையான சாணத்தை 15நாட்கள் நிழலில் உலர வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சேகரித்த இயற்கை பொருட்களான இலை, தழைகள் போன்றவற்றை தினசரி கிளறிவிட்டு 15 நாட்கள் ஈர நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், குப்பைகள் மக்கும் போது ஏற்படும் வெப்பம் குறைந்து குப்பை பதப்படும்.

எறும்புகளை தடுக்க
தயார் செய்த எருக்குழியின் அடிப்பாகம் சமமாக இருக்குமாறு மணலைப் பரப்பி அதன் மீது பதப்படுத்தப்பட்ட குப்பை 10 செமீ உயரத்திற்கு பரப்பி அதன் மேல் 3 செ.மீ உயரத்திற்கு சாணித்தூளை பரப்பவும். இதன் மேல் சாணிப்பாலுடன் புளித்த மோரைக் கலக்கி தெளிக்கவும். இவ்வாறு குப்பை சாணம், சாணிப்பால் என குழி நிறையும் அளவிற்கு எருப்படுக்கை தயார் செய்து கொள்ள வேண்டும். 

பின் கோணிச் சாக்கினால் மூடி 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் தெளிக்கவும். சுமார் கால்கிலோ வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து எருப்படுக்கையில் தெளிக்கவும். பின்பு சுமார் ஆயிரம் மண்புழுக்களை படுக்கையின் மீது பரவலாக விட்டு குழியினை ஈரச்சாக்கு அல்லது வைக்கோல் கொண்டு மூடவும். குழியைச் சுற்றிலும் எறும்புகள் போகாதவாறு லிண்டேன் மருந்தினை தூவவும்.
அறுவடை
இப்படி அமைக்கப்படும் எருப்படுக்கை காய்ந்து போகாதபடி, அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதம் 40 முதல் 50 சதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இவ்வாறு பராமரித்து வரும் நிலையில் சுமார் 35 முதல் 45 நாட்களில் மண்புழு எருவானது குருணைகள் போல் காணப்படும். கழிவுகள் முழுவதும் எருவான பின்னர் மூன்று நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். 

இவ்வாறு செய்தால் மேல் அடுக்குகளில் உள்ள மண்புழுக்கள் கீழே சென்று விடும். அப்போது, படுக்கையின் மேல் உள்ள எருவினை சேகரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட எருவினை 3 மி.மீ அளவுள்ள சல்லடையில் சலித்து மூடையில் கட்டி வைக்கலாம். எருக்குழியில் அடியில் தங்கும் மண்புழுக்களை அப்படியே விட்டு பிறகு புது எருக்குழிக்குபயன்படுத்திக் கொள்ளலாம்.
சத்துக்கள்
மண்புழு எருவில் சராசரியாக 2.14 சதம் தழைச்சத்தும், 3.44 சதம் மணிச்சத்தும், 1.01 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. இதைத் தவிர அதிக எண்ணிக்கையில் நுண்ணுயிர் சோடியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், கந்தகம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை செறிந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த இயற்கை உரத்தை பயிருக்கு இடும் போது பயிரின் விளைச்சல் அதிகரிக்கிறது. இயற்கையான உரத்தால் விளைவிக்கப்பட்ட தரமான விளைபொருள் கிடைக்கிறது.
உங்கள் வீட்டில் ஒரு 15 மண் தொட்டிகளை வாங்கி விதை போட்டு தக்காளி, கத்தரிக்காய், வெண்டை என்று செடிகளை நட்டு அவற்றுக்கு இந்த மண்புழு உரத்தை போட்டு பாருங்கள். பிறகென்ன....ஆர்கானிக் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அழகுபடுத்தப்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் உங்கள் வீட்டிலேயே தயார். மணமும், குணமும் மிக்க குழம்பு, கூட்டுக்களுக்கு மண்புழுக்கள் நமக்கு கியாரண்டி தருகிறது. உரங்களை அழகாக பேக் செய்து விற்று கை நிறைய காசும் பார்த்துவிடலாம்!

Comments

  1. u people r spreading valuable knowledge 2 us.keep up the good job.may god bless us all.Deen from Johor Bahru, Malaysia.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?