07 August, 2011

காலை நேரம் கடனே என்றில்லாமல் இனிமையாக இருக்க!

        வித விதமாக, பல்சுவையாக சப்புக் கொட்டி சாப்பிட்டு அதை ஜீரணிப்பதில் முதல் இன்பம்.பிறகு அடுத்த நாள் போராட்டம் இல்லாமல்,முக்கல் முனகல் இல்லாமல் முன்பு சாப்பிட்டதை லாவகமாக  வெளியேற்றினால் அதுவே பிரதான இன்பம்.
        கால்நடை நடைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வருவதே இல்லை! ஏன்? அது சாப்பிடும் உணவில் (தீவனத்தில்) நார்ச்சத்துக்கள் ஏகத்துக்கு நிறைந்திருப்பதுதான்! நாம் வளர்க்கும் செல்லபிராணி நாய் இயற்கையிலே மலச்சிக்கல் என்று உணர்ந்தால் உடனே அவை புல்லை சாப்பிட்டு நார்ச்சத்துகள் உடலில் சேரும் வகையில் ஏற்படுத்திக்கொள்கிறது.
         ஆனால் நமக்குதான் டாக்டர் நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கசொன்னால்தான் அதுவும் காலை பொழுது அவஸ்தையில் முடிந்தால் தான் நார்ச்சத்து உணவை நினைத்து பார்ப்போம்..

அதென்ன, நார்ச்சத்து உணவுகள்?
           உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு ப்ரைஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும்  கூரியர் சேவையை செய்கிறது.
தேவை 35 கிராம் நார்ச்சத்துகள்:-
                         ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம்; சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.. நேரடியாக ,கீரை,காய்கறி, பழங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன.
                     உடனே டாக்டர் சொல்லிவிட்டார் என உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், அதுவும் தவறு! வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.
என்ன சாப்பிடலாம்
ஒயிட் பிரட்டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள்; கேக், பிஸ்கட், இனிப்புகளை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம். சாப்பிடமுடிந்தவைகளை மேல் தோலுடன்
சாப்பிடுங்கள், தோலில் தான் நார்சத்து அதிகம்.ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி,  முழு கோதுமை, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.


                     நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் சாப்பிட
* பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்த சாலட் சாப்பிடலாம்.
* பழ ஜூஸ் குடிக்கலாம்; தவறில்லை; ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட்டால் தான் அதிக சத்து.
* ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடுபவரா? முதல்ல அதை விடுங்க;  சச்சின் போல அப்படியே முழுசா சாப்பிடுங்க.
* சூப் சாப்பிடுவதென்றால், அதிக காய்கறிகளை சேருங்க.
* உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம்,
பழங்கள், கீரைகள்  எங்கு தேடி எப்படி? என்ற சுறுசுறுப்பானவர்களுக்கு மாத்திரை, மற்றும் பவுடர் வடிவில் நார்ச்சத்துகள் மருந்துகடைகளில் கிடைக்கிறது. மருத்தவரின் ஆலோசனை படி சாப்பிட்டு காலை (கடன்)பொழுதை இனிதே அமைத்துக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...