26 August, 2011

முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா?

eggகணினியின் துணைகொண்டு ஒரு செயற்கையான வேதிவினை நிகழ்த்தப்பட்டது. இந்த வேதிவினையில் கால்சியம் கார்பனேட் துகள்களின் மீது vocledidin-17 (OC-17) புரதம் ஒட்டிக்கொண்டு படிகங்களை உருவாக்கின. காலப்போக்கில் படிகத்தின் உட்கரு தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பெரிதானதும் vocledidin-17 (OC-17) துகள்கள் உதிர்ந்துவிட்டன. அதாவது vocledidin-17 (OC-17) ன் பங்கு ஒரு கிரியா ஊக்கி என்பதோடு சரி. இவ்வாறு உதிர்ந்த vocledidin-17 (OC-17) புரோட்டின் துகள்கள் மீண்டும் கால்சியம் கார்பனேட் படிகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறது. இந்த வினையின் விளைவாக குறைந்தகாலத்தில் முட்டை ஓடு உருவாகிறது.
முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். கோழிதான் முதலில் வந்ததாம். இந்த கண்டுபிடிப்பு கணினியின் உதவியோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முடிவின்படி முட்டையின் ஓட்டில்தான் ரகசியம் பொதிந்திருக்கிறது. முட்டை ஓடு உருவாவதில் கோழிக்குஞ்சின் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது. vocledidin-17 (OC-17) எனும் புரதம் முட்டை ஓட்டினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது ஏற்கனவே அறிவுலகம் அறிந்த ஒன்று.

முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா?
எதுவாக இருந்தால் என்ன! மணமணக்கும் ருசியான கோழி வறுவல் தான் கடந்துவந்த பாதையை படங்களாக பாருங்கள்!!


 






























ஒரு கொசுரு செய்தி : மேலே கண்ட கருவுற்ற முட்டைகளை பார்த்து மிரண்டுவிடவேண்டாம்! பண்ணையில்  சேவல் இல்லாமல் வளர்க்கப்படும் கோழியிலிருந்து  கிடைக்கும் முட்டைகள் கருவுராத முட்டைகள் ! அவைகள் நான்   வெஜிட்டேரியன் என்னை சாப்பிடுங்கள் என்று முட்டைகள் கழகம் முழக்கம் இடுகிறது!
 எனவே வெஜிட்டேரியன்கள் அந்த முட்டைகள் கூறுவதை நம்பினால் ஆம்லெட்டாக செய்து அந்த முட்டைகளின் கூற்றை பரிசோதித்து பார்க்கலாம்!

24 August, 2011

மண்ணிற்கும் மனிதர்க்கும் உரம் சேர்க்கும் மண்புழு !


 அதிக அளவில் ரசாயன உரங்களை பயிர்களுக்கு மற்றும் பழ வகை மரங்களுக்கு பயன்படுத்துவதால் இதன் ரசாயண படிமம் விளைபொருட்களில் சேர்ந்து அவைகளை உண்ணும் நமக்கு தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்துகிறது என ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். எனவே இயற்கையில் கிடைக்கும் தொழு எரு, தழை எரு ஆகியவற்றை பயன்படுத்துவது நிலத்திற்கும், பயிர்களுக்கும் ஏற்றது. இந்த எருவிற்கு ஒப்பாக அல்லது அதை விட அதிகமாக கருதப்படும் மண்புழு உரத்தை நாமே தயாரித்து பயிருக்கு இடலாம் அல்லது நல்லமுறையில் பேக் செய்து நகரபகுதியில் காய்கறி பயிரிடுவோர்களுக்கும் பூஞ்செடி வளர்ப்போர்களுக்கும் விற்றுவிடலாம்.

கால்நடைகளை வளர்ப்போர் தங்களுக்கு கிடைக்கும் சாணத்தை மற்றும் இழை, தழை ,குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி  ‘ போர்ன்விட்டா போன்று அருமையான மொறுமொறு கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். மண்புழு உரம் தயாரிக்க சில வகை மண்புழு இனங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன.
மண்புழு தேர்வு
இந்த வகையில் மண்புழு உரம் தயாரிக்க தேர்வு செய்யப்படும் மண்புழுவானது, அங்ககப்பொருட்கள் என்னும் இயற்கை கழிவுகளை சாப்பிடும் திறன், விரைவான வளர்ச்சி, குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் திறன் ஆகிய குணங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த குணங்களை எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை சேர்ந்த மண்புழுக்கள் கொண்டுள்ளன. இவற்றை கொண்டு குழி முறையில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம்.

குழிமுறை
குழிமுறையில் மண்புழு எரு தயார் செய்ய வீட்டு புழக்கடை அல்லது தோட்டத்தில் சமன் செய்யப்பட்ட நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடம் மழைநீர் தேங்காத, சூரிய ஒளிபடாத நிழல் பகுதியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில், 180 செமீ நீளம், 90 செமீ அகலம், 30 செமீ ஆழம் உள்ள குழியை தயார் செய்ய வேண்டும். குழிகளில் எறும்பு மற்றும் கரையான் பிரச்சினையை தவிர்க்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் குளோர்பைரியாஸ் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். 

மருந்து தெளித்து பதினைந்து தினங்களுக்குப் பிறகு எரு படுக்கைகள் அமைக்க வேண்டும். எரு படுக்கைகளுக்கு தேவையான சாணத்தை 15நாட்கள் நிழலில் உலர வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சேகரித்த இயற்கை பொருட்களான இலை, தழைகள் போன்றவற்றை தினசரி கிளறிவிட்டு 15 நாட்கள் ஈர நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், குப்பைகள் மக்கும் போது ஏற்படும் வெப்பம் குறைந்து குப்பை பதப்படும்.

எறும்புகளை தடுக்க
தயார் செய்த எருக்குழியின் அடிப்பாகம் சமமாக இருக்குமாறு மணலைப் பரப்பி அதன் மீது பதப்படுத்தப்பட்ட குப்பை 10 செமீ உயரத்திற்கு பரப்பி அதன் மேல் 3 செ.மீ உயரத்திற்கு சாணித்தூளை பரப்பவும். இதன் மேல் சாணிப்பாலுடன் புளித்த மோரைக் கலக்கி தெளிக்கவும். இவ்வாறு குப்பை சாணம், சாணிப்பால் என குழி நிறையும் அளவிற்கு எருப்படுக்கை தயார் செய்து கொள்ள வேண்டும். 

பின் கோணிச் சாக்கினால் மூடி 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் தெளிக்கவும். சுமார் கால்கிலோ வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து எருப்படுக்கையில் தெளிக்கவும். பின்பு சுமார் ஆயிரம் மண்புழுக்களை படுக்கையின் மீது பரவலாக விட்டு குழியினை ஈரச்சாக்கு அல்லது வைக்கோல் கொண்டு மூடவும். குழியைச் சுற்றிலும் எறும்புகள் போகாதவாறு லிண்டேன் மருந்தினை தூவவும்.
அறுவடை
இப்படி அமைக்கப்படும் எருப்படுக்கை காய்ந்து போகாதபடி, அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதம் 40 முதல் 50 சதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இவ்வாறு பராமரித்து வரும் நிலையில் சுமார் 35 முதல் 45 நாட்களில் மண்புழு எருவானது குருணைகள் போல் காணப்படும். கழிவுகள் முழுவதும் எருவான பின்னர் மூன்று நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். 

இவ்வாறு செய்தால் மேல் அடுக்குகளில் உள்ள மண்புழுக்கள் கீழே சென்று விடும். அப்போது, படுக்கையின் மேல் உள்ள எருவினை சேகரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட எருவினை 3 மி.மீ அளவுள்ள சல்லடையில் சலித்து மூடையில் கட்டி வைக்கலாம். எருக்குழியில் அடியில் தங்கும் மண்புழுக்களை அப்படியே விட்டு பிறகு புது எருக்குழிக்குபயன்படுத்திக் கொள்ளலாம்.
சத்துக்கள்
மண்புழு எருவில் சராசரியாக 2.14 சதம் தழைச்சத்தும், 3.44 சதம் மணிச்சத்தும், 1.01 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. இதைத் தவிர அதிக எண்ணிக்கையில் நுண்ணுயிர் சோடியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், கந்தகம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை செறிந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த இயற்கை உரத்தை பயிருக்கு இடும் போது பயிரின் விளைச்சல் அதிகரிக்கிறது. இயற்கையான உரத்தால் விளைவிக்கப்பட்ட தரமான விளைபொருள் கிடைக்கிறது.
உங்கள் வீட்டில் ஒரு 15 மண் தொட்டிகளை வாங்கி விதை போட்டு தக்காளி, கத்தரிக்காய், வெண்டை என்று செடிகளை நட்டு அவற்றுக்கு இந்த மண்புழு உரத்தை போட்டு பாருங்கள். பிறகென்ன....ஆர்கானிக் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அழகுபடுத்தப்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் உங்கள் வீட்டிலேயே தயார். மணமும், குணமும் மிக்க குழம்பு, கூட்டுக்களுக்கு மண்புழுக்கள் நமக்கு கியாரண்டி தருகிறது. உரங்களை அழகாக பேக் செய்து விற்று கை நிறைய காசும் பார்த்துவிடலாம்!

21 August, 2011

பிஞ்சு மனசுக்கு கொடுக்கும் அடிகள்! மனச்சிதைவின் ஆரம்பம்!!



சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது.  மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவாஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
குழந்தைகளை கையாள்வது எப்படி:  பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.  சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்.  நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்டபடி திட்டுவார்கள். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல.  நம்மை மையப்படுத்தி இருக்கிறது.  முதலில் அதை உணர்வோம். அடுத்து குழந்தை தன்னையோமற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும்.  சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும்.  விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும்.
அடிக்காமல் வளர்ப்பது எப்படி: குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பதுஇந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது.  சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும்.  இப்படி  ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு.  முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக,  இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன.  அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தை உரிமை மீறல்: மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.  இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவாஇப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது.  உதாரணமாக 8 மாதக்  குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார்.  அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு,  மகிழ்ச்சி.  தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி. 
ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு  என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது.  ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது.  வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்து விடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால்அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். 
ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது.  இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை. இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால்குழந்தையை ஒழுங்காகவும்நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று நினைப்பார்கள்.  இதைப் பார்க்கும்போது,  கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.  குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல.  அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்.  ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல.  அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. 
உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களைஎண்ணங்களைஅவர்கள் மீது திணிக்காதீர்கள்.  அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு.  நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்.  ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.  ஏனென்றால்ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்ற வரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல.  நம் குழந்தையே ஆனாலும்நாம் அவர்களை வன்முறைக் குள்ளாகக் கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது.  அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமாபேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம். 
நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால்அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான்.  நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள்.  ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும்.  நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது.  தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா. குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள்.  நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாகவளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும்.   பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும். 
உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட் என்று திட்டிக்கொண்டே இருந்தால்அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக் குள்ளேயே தங்கிவிடும்.  சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே  அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும்.  பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும்.  எனவே, மனதளவில் பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. 
இப்படிப் பாதிக்கப்பட்ட  குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். கண்டிப்பது என்பது வேறுதண்டிப்பது என்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது. தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக் குள்ளாக்குவது.  ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும். 
மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்து விடக்கூடாது.  குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது.  தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி,  பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால்அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை  குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள்.  அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.-நன்றி புதிய தென்றல்

20 August, 2011

சிட்டுக்குருவியின் காதலுக்கு கட்டுப்பாடு ஏது?



பறவைக் கூடுகளில் பாப்புலர் ரகம், தூக்கணாங்குருவியின் தொங்கு கூடுதான்! ஏராளமான ஆர்க்கிடெக்ட் வித்தைகள் செய்து சிங்கிள் மற்றும் டபுள் பெட்ரூமுடன் கூடுகள் நெய்யப்படுகின்றன. புல், வைக்கோல்,சிறிது களிமண் பொன்றவற்றை கட்டுமான பொருள்களாக வைத்து இமாலயப் பொறுமையுடன் தனது கூட்டை அமைத்துக்கொள்கிறது புளோசெய்டே ( Ploceidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த தூக்கணாம்குருவி.
இந்த குடும்பத்தில் உள்ள தூக்கணாங்குருவிகளில் நான்கு வகைகளுக்குதான் இந்தியாவில் சிட்டிசன்ஷிப்! பாயாக் குருவியும் மஞ்சள் குருவியும் கன்னியாகுமரி முதல் கார்கில் வரை சிட்டு மொழி பேசி சிட்டாக பறந்து கொண்டிருக்கின்றன. கருப்புத் தொண்டைக் குருவி என்று மற்றொரு வகை வடகிழக்கு மாநிலங்களில் ஜாகை ! இது மட்டும் அருகில் உள்ள பாகிஸ்தானிலும் கூட அல்கொய்தா பயமில்லாமல் அழகாக வாழ்கின்றன.
தூக்கணாங்குருவிகள் பொதுவாக கூட்டு வாழ்க்கை வாழவே விரும்புகின்றன. செழிப்பான விளைநிலங்கள்தான் இவைகளுக்கு ஃபைவ்ஸ்டார் ஓட்டல்கள்! வடக்கத்திப் பார்ட்டிகள் மட்டும் கொஞ்சம் ரிசர்வ் டைப். இவை தன்னந்தனியே கூட அலைவதுண்டு. அல்கொய்தா சகவாசம்?
காதல் புரிவதில் தூக்கணாங்குருவிகள் செமக் கில்லாடிகள்! அதுவும் ஆண் குருவிகள் மன்மதப் பேர்வழிகள். குறைந்தபட்சம் 3-4 குடும்பங்களை ஒரே நேரத்தில் மெயின்டெயின் பண்ணும். இந்தக் காதல் மனைவிகளும் அப்படியொன்றும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. பெண் குருவிகள் ஒரு விசேஷ சுயம்வரம் நடத்தி, ஆண் குருவிகளின் வாளிப்பான தேகம் பார்த்து, வசதி பார்த்து அப்புறம்தான் கழுத்தை நீட்டுகின்றன.
மழைக்காலம் துவங்கிவிட்டால் இவைகளுக்கு காதல் பீறிட்டு வந்துவிடும்! இந்நேரத்தில் ஆண் குருவிகள் கவர்ச்சியான காம மேக்கப்புக்கு மாறிவிடும். உடலின் மேற்புறத்தில் மஞ்சள் மற்றும் கரும்பழுப்பு வரிப்புள்ளிகளும் மஞ்சள் மார்பும் என மாற்றிக்கொண்டு பளிச்சென்றிருக்கும்.இத்தகைய 40-50 ஆண்குருவிகள் கரையோர மரங்களில் தம் காதல் கோட்டைகளை கட்டத் துவங்கும்.எத்தனை உயரத்தில் கூடுகட்டினாலும் ஒரு ஏர்கூலரின் குளு குளு வசதிக்காக, கூட்டிற்கு நேர் கீழே தண்ணீர் இருக்கும்.

ஒவ்வொரு ஆண் குருவியும் அதன் கற்பனைத் திறனுக்கு ஏற்ப கூட்டின் டிசைனை வடிவமைக்கும். இவை ஒட்டு மொத்தமாய் காதல் கானத்தை கோஷ்டியாக பாடிக் கொண்டு கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் ஈடுபடும். முதலில் ஒரு உறுதியான பிடிப்பை மரக்கிளையில் பின்னிவிட்டு, அதிலிருந்து நீளவாக்கிலும் குறுக்கிலும் பல லூப்புகளை ஸ்வெட்டர் பின்னுவது போல் பின்னி ஸ்கெலிட்டனைத் தயார் பண்ணும். பின் இதன் பக்கவாட்டில் துருத்திக் கொண்டிருக்குமாறு சேம்பர்களை அமைக்கும்.இதில் கீழ்ப்புறத்து பாதுகாப்பான சேம்பர் முட்டை ஸ்பெஷல்! ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன ஒரு ஆராய்சியாளர் மெனக்கெட்டு கவுண்டிங் செய்துள்ளார். கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு (??) போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. (ஆனால் சில சமயம் குரங்குகளுக்கு அட்வைஸ் செய்து கூட்டை இழக்கும்! கதைதான்! இருந்தாலும் குரங்கு பாட்ர்டிகளுக்கு உபதேசம் யாரும் செய்யகூடாதுதானே? )இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால் கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது. (இவைகளிலுமா??)
கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தில் பெண் குருவிக் கூட்டம் திடீரென ஆஜராகிவிடும். இவை ஒவ்வொரு கூடாய் மாறிமாறி விசிட் அடித்து ஆய்வு செய்யும். இப்படி விசிட் வரும் போது அக்கூட்டின் ஆண்குருவி என்னைப்பார்! என் கூட்டைப்பார்!! என்று ஆஜானபாகுவாய் அழகு காட்டும். ஒரு வழியாய் மனங்கவர்ந்த கூட்டில் பெண் குருவி அமர்ந்து கொள்ளும். பெண் குருவி வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு மின்மினி பூச்சியை பிடித்து கூட்டின் உள்ளே களிமண் பேஸ்ட் கொண்டு ஃபிக்ஸ் செய்து முதல் இரவை கொண்டாட தயார் ஆகிவிடுகிறது. மழைக் குளிரின் கதகதப்பில் சில நாட்களுக்கு புது மனைவியிடன் ஓயாமல் இணை சேரும். குருவி 2-5 முட்டைகளை இட்டு, பெண் குருவி 15 நாள் வரை அடைகாக்கிறது. ஆண் குருவி முதல் பெண் குருவியிடம் விடுதலை பெற்று  அடுத்த பெண் குருவிக்கு அடுத்த கூட்டை கட்டி அழகு காட்ட ஆரம்பிக்கிறது. இதே ரீதியில் அதிக பட்சம் ஐந்து குடும்பங்களை ஏற்படுத்திவிடுகிறது. அப்புறம் ஏராள வாரிசுகளுக்கு அப்பாவாகிப் போன சந்தோஷத்திலும்,சீசன் முடிந்து போன ஏக்கத்திலும் வேறு வேலை பார்க்க போய்விடும். மறுபடியும் மழைக்காலம் வராமலா போய்விடும் என்ற ஆறுதலுடன்!


தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...