09 June, 2011

கொலைகார “மைசூர்” யானையை கட்டுபாட்டில் கொண்டு வந்தது எப்படி?


அடர்ந்த காட்டு பகுதியிலிருந்து சில சமயங்களில் மனிதர்கள் வசிக்கும  பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்வதுண்டு. ஏன் நாம் வளர்க்கும் அல்லது கோயில் யானைகள் கூட சில நேரங்களில் மதம் பிடித்து மனிதர்கள்,கால்நடைகள் என கண்ணில் தெரியும் அனைத்தையும் துவம்சம் செய்யும் இயல்பை கொண்டுள்ளது.

யானையில் கட்டுபாடில்லா வன்முறையை பார்க்க பார்க்க மனம் பதைத்து வனத்துறை என்ன செய்கிறது? கால்நடை மருத்துவர்கள் இதை தடுக்கக்கூடாதா? என ஆதங்கத்தில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.இருப்பினும்
இந்த ஆக்ரோஷ யானையை பாக்யராஜ் பாணியில் ஒரு பெண் யானையை கொண்டு வந்து முன்னால் நிற்க வைத்து சமாதான படுத்தலாம் என்றால் இயலாது!
தமிழ் பட ஹீரோ போல் பட் பட் என சுட்டுவிடலாம் என்றால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் தன் தலையை நுழைந்துவிடும்.
பொதுமக்கள் உள்ளே நுழைந்த யானையை கல் எறிவது, தாரை தப்பட்டை என அதிக சப்தம் ஏற்படுத்துல் போன்ற காரியங்களை செய்யாமல் வீட்டினுள்ளேயே இருப்பது மிகவும் நல்லது. இப்படிப்பட்ட யானைகள் பதற்றதுடனும், காட்டை விட்டு வந்த இனம்புரியாத  பயம் எல்லாம் சேர்ந்து மிகவும் கோபமாக இருக்கும். எனவே அதை மேலும் கடுப்பேற்றாமல் அமைதியாக இருக்கவிடுவது நல்லது. யாரேனும் மாட்டிக்கொண்டால் மனிதாபிமானம் என்று அதிக படி ஆர்வத்தில் அவர்களை காப்பாற்ற முயலவேண்டாம். யானை அவர்களை தூக்கிகொண்டே காப்பாற்ற வருபவரையும் தாக்கிவிடும். 40 கிலோ மீட்டர் வேகத்தில் நடந்து ( ஓடி ) எட்டி பிடித்து விடும். இக்கட்டான தருணம் ஏற்பட்டால் முடிந்த வரை அருகில் மரம் அல்லது உயரமான மதிலில் ஏறிக்கொள்ளவேண்டும். அந்த நேரத்தில் பொதுவாக யானைகள் தன் கண்பார்வையின் நேர்கோட்டில் உள்ளவைகளையே அதிகம் தாக்கும். அன்னாந்து பார்த்து தாக்காது! என்கிறார் வனத்துறையில் பல ஆணடுகள் பணிபுரிந்த  அனுபவம் உள்ள திரு. P.R. மணி அவர்கள்!
மேலும் அதன் கண்பார்வை அதனுடைய உயரம் 6 அடி முதல் 8 அடி வரை இருக்கலாம்.அதை அனுமானித்து அந்த உயரத்திற்கு மேல் ஏறி கொள்வது நல்லது. எனக்கு மரம் ஏற தெரியாதே என்றாலும் எதற்கும் முயற்சி  செய்து பாருங்கள் அந்த சமயத்தில் அட்ரினலின் நன்றாக வேலை  செய்தால்  மள மளவென்று மரம் ஏற முடிந்தாலும் முடியும்! ஆனால் இறக்கி விடத்தான் யாரேனும்  வரவேண்டும்! உயரம் குறைவாக இருந்தால் யானையே இறக்கி விட்டுவிடும்!? சில தைரியமான மலைவாசிகள் படுத்த நிலையில் உருண்டு உருண்டே தப்பியிருக்கிறார்களாம்? சரியாக தலையை குனிந்து தந்தத்தாலோ தலையினாலோ தரையோடு சேர்த்து அழுத்த வரும் போது உருண்டு நகர்ந்துவிடவேண்டும்! என்கிறார். மேலும் அதுக்கு தைரியம் வேணுமே!

வனத்துறைக்கு தகவல் கிடைத்ததுமே ( அவர்கள் யானைதானே) வனத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் வன கால்நடை மருத்துவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தன் திட்டத்தை வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். மயக்க ஊசி மூலம் பிடிப்பதற்கு அல்லது கட்டுபடுத்துவதற்கு அந்த யானை ஆரோக்கியமாக உள்ளதா? வயது? ஆணா, பெணா? இதன் எடை என்ன? என்ன வகையான மருந்தை உபயோகப்படுத்தலாம்? என்ன அளவு மருந்தை செலுத்தலாம்? எந்த வகை ஊசி செலுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தலாம்?   என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு டேட்டா ஷீட்டில் பதிவு செய்து குழுவினால் ஒப்புதல் பெற வேண்டும். ஏனென்றால் மயக்கம் மருந்து ஓவர் டோஸ்  ஆனால் யானை குளோஸ்! குழுவும் நிறைய விசாரணைகளை  சந்திக்க வேண்டிருக்கும்! ஏன் சிறை தண்டனையை கூட கிடைக்க வாய்ப்புளளது!

நோயுற்றுள்ளது , எலும்பும் தோலாக பலகீனமாக இருத்தல்சினையாக உள்ளது  என அறியப்பட்டால் மயக்கம் மருந்து திட்டம் கிடப்பில் போடப்படும். அந்த பகுதியில் வெட்பநிலை 35o C க்கு மெல் இருந்தாலோ 10oc க்கு உள் இருந்தாலும் மயக்க மருந்து கொடுப்பது பிடிப்பதில்லை. அதிகம் வெப்பம் உள்ள நிலையில் மயக்க மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தி யானையின் உடல்  முழுவதும் கொப்பளத்தை ஏற்படுத்திவிடும்.  மேலும் மயக்க மருந்திற்கான மாற்று மருந்து மனிதருக்கு மற்றும் விலங்கிற்கும்   ( Antidote) கைவசம் தயாராக இருக்கவேண்டும். யானைக்கு கொடுக்கும்  மயக்க மருந்நு M-99 IMMOBILON  ( Etrophine Hydrochloride + Acepromazine) போன்ற மருந்துகளை கையாலும்போது  கண்களில் சிறு துளி பட்டாலும் மரணம் தான். மேலும் மயக்கம் அடைந்த யானையை மீண்டும் பழைய நிலைக்கு உடனடியாக கொண்டு வர விலங்கிற்கான மாற்று மருந்தும் அவசியம் தேவைப்படுகிறது. யானை மயக்கம் அடைந்து விழும்போது பக்கவாட்டில் விழுந்தால் பல  மணி நேரம் கூட விடலாம். ஆனால் நெஞ்சு பகுதியை (Sternal Recubancy) அடியில் வைத்து விழுந்து கிடந்தால் 20 நிமிடங்களில் மாற்று மருந்து கொடுத்து யானையை எழுப்புவது அவசியம். இந்த நிலையில் யானைகள் மூச்சு திணறி இறந்துவிடுகிறது. எந்த நிலையில் இருந்தாலும் உடனடியாக மாற்று மருந்து கொடுப்பது அவசியம். நார்கன் (Norcan) என்ற மருந்து மனிதர்களின் மாற்று மருந்தாகவும் டைஃபிரிநார்ஃபின் ( Diprenorphine) ) என்ற மருந்து விலங்கின் மயக்க மருந்து மாற்று மருந்தாக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
M-99 IMMOBILON( Etrophine Hydrochloride + Acepromazine) மயக்க மருந்தை டோஸ்க்கு தகுந்தார்போல் எந்த டார்ட் (Dart) என முடிவு செய்யவார்கள். இந்த பச்சை நிற டார்ட் மூன்று வகையாக உள்ளது. 1மிலி முதல் அதிக பட்சம் 15 மிலி வரை போட  டார்ட உள்ளது. துப்பாக்கிக்குள் வைக்கும் சிரிஞ்சை தான் டார்ட் என்கிறார்கள். மருந்தை செலுத்துவற்கு பிரத்தியேகமாக உள்ள   துப்பாக்கி ( Dist- inject Riffle Model N ) தெரிவு செய்யப்பட்டு எவ்வளவு தூரத்திலிந்து மருந்தை சுடபோகிறோம் என முடிவு செய்து அதற்கு தகுந்தாற்போல் குண்டை ( Catridges) தேர்ந்தெடுக்கபடும். கேட்ரஜ் நான்கு வகைகளில் வருகிறது. பழுப்பு நிறம் 10-20 மீட்டர் வெள்ளை நிறம் 30-40 வரை கருப்பு நிறம் 40-50 மீட்டர் ஆரஞ்சு நிறம் 50-60 மீட்டர் வரை செலுத்தக்கூடியது. யானையின்  மனநிலை செலுத்துவரின் குறிபார்க்கும் திறமையைகொண்டு கேட்ரஜ் தெரிவுசெய்யப்படுகிறது. குறிபார்க்கும் திறமையை பரிசோதித்துக்கொள்ள 5 டம்மி ஊசிகளும் மருந்துடன் வருகிறது. இதை வைத்து தூரத்தில் உள்ள கொல்லை  காட்டு பொம்மையில் பயிற்சி செய்துகொண்டு யானையை கட்டுபடுத்த ரைஃபில் உடன் கிளம்புவார்கள்ஏனேன்றால் M-99 மருந்து 1 மிலி ரூ 1000/- ஒரு பெரிய யானைக்கு 4 மிலி மருந்து செலுத்தவேண்டிஇருக்கும. மருந்தை தோள்பட்டை அல்லது பின்புறத்தில் அடிக்கவேண்டும். 6 நிமிடங்களில் யானையின் வேகம் குறையும், நடை தடுமாறும்,, ஆண் யானையா இருந்தால்  இதன் ஆண்குறி ரிலாக்ஸ் ஆகி வெளியே தொங்கி விடும்! பிறகு விழுந்து விடும்.   உடனடியாக வக்கை மரத்து பட்டையில் செய்யப்பட்ட வடத்தில் யானையின் கால்கள் கட்டப்படுகிறது. இந்த கயிறுதான் யானைகளை கட்ட பயன்படுத்துகிறார்கள்! பின் மயக்க மாற்று மருந்து செலுத்தி யானையின் மயக்கம் போக்கப்படுகிறது! M99 மருந்து கிடைக்காத போது ஜைலசின் ( Xylazine) யானைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் கொஞ்சம் தாமதமாகதான் மயக்கம் ஏற்படும் அதுவும் முன்பே யானை பதற்றத்தில் இருந்தால் மயக்கம் வருவதற்கு 4 மணிநேரம் கூட ஆகிவிடும்.
மயக்க மருந்து கொடுக்கமுடியாத நிலையில் இருந்தால் நான்கு கும்கி யானைகளை கொண்டு வந்து நாலாபக்கமும் சூழ்ந்து  இந்த அட்டகாச யானையை கும்ம வேண்டியதுதான்! சில சமயங்களில் கும்கியின் குத்துகளை தாக்குபிடிக்கமுடியால் இறந்தேவிடுவதும் உண்டு! கும்கி யானைகளைப் பற்றி வேறுவொரு நாள் பார்ப்போம்!

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...