12 June, 2011

ஒட்டசிவிங்கியின் கழுத்தும் காதலும்!


அலாதியான கழுத்துக்கென்றே பெயர் பெற்ற உயிர் ஒட்டகச்சிவிங்கி. கி.மு.40-ம் ஆண்டு முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு ஜூலியஸ் சீசரால் அறிமுகமானதுதான் இது.பாலூட்டி வகைகளில் மிகவும் உயரமான இனம் ஒட்டகசிவிங்கி! இதன் அறிவியல் பெயர் (Giraffa camelopardalis)   ஜிராஃபிடே குடும்பத்தை சார்ந்த (Giraffidae) ஒட்டகசிவிங்கி 18 அடி வரை வளரும். 900 கிலோ வரை எடை இருக்கும். ஒட்டகத்தின் உடல் அமைப்பு தோலில சிறுத்தையின் டிசைன் என்று கலந்து இருக்கும். அதனாலேயே இது ஒட்டகமும் சிறுத்தையும் சேர்ந்ததால் ஏற்பட்ட கலப்பு இனமா? என்று கூட ஆரம்பத்தில் ஒட்டகத்தின் கற்பை பற்றி தவறாக நினைத்தார்கள்.ஆனால் அப்படி இல்லை! ஒட்டகசிவிங்கி ஒரு தனி இனம் தாம்!! ஆணை விட பெண் ஒட்டகசிவிங்கி உயரம் , எடை குறைவாக இருக்கும்.

ஒட்டகசிவிங்கிகளின்  கழுத்து எந்த விலங்குக்கும் இல்லாதா சிறப்பாக 10 அடி இருக்கும். இதை நினைத்து அதிகமான கழுத்து எலும்புகள் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு! இதற்கும் கழுத்து எலும்பு (Neck Vertebrae) 7 எண்ணிக்கை மட்டும்தான்.( எலி முதல் மனிதன் அனைத்துக்கும் எழு எண்ணிக்கைதான்) இந்த சிறப்பு அமைப்பிற்கு என்ன காரணம் என்று 200 ஆண்டுகளாகவே ஆராய்ச்சியாளர் ஒட்டகசிவிங்கயின் கழுத்தை அன்னாந்து பார்த்து, பார்த்து   ஆராய்ந்தும் ஒரு தெளிவான விளக்கத்தை கூற முடியவில்லை.  ஏகப்பட்ட முரண்பாடுகள்! ஆராய்ச்சியாளர்களுக்கு கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்

ஒட்டகசிவிங்கியின் மூளை இதன் இதயத்திலிருந்து 10 அடி உயரம் உள்ளதால் மூளைக்கு ரத்த்த்தை செலுத்த மற்ற பாலூட்டிகளை விட இரண்டு மடங்கு அளவில் இரத்தத்தை வேகமாக இதயம் பம்ப் செய்கிறது. இதயத்தின் எடை 10 கிலோ ! நீளம் 2 அடிகள்!! மேலும் இரத்தம் கழுத்திலிருந்து கீழ் இறங்கமால் இருக்க கழுத்து இரத்த நாளத்தில் ( Jugular Vein)  7 எண்ணிக்கை சிறப்பு வால்வுகள் இருக்கின்றன்.எளாஸ்ட்டிக் இரத்த நாளம்! அதே சமயத்தில் கழுத்தின் மேல் பகுதியில் ஒட்டகசிவிங்கியின் தலை தரை பகுதிக்கு வரும்போது அதிகம் இரத்தம் மூளைக்கு செல்லாமல் இருக்க ரெட்டி மிர்ரபைல்( rete mirabile) என்ற  அமைப்பும் உள்ளது. இந்த ஹைடெக் வசதி எந்த ஜீவனித்திடமும் இல்லாத ஒரு அமைப்பு. இந்த அமைப்பை ஆராய்சி செய்து நாஸா (NASSA) விஞ்ஞானிகள் விண்வெளியிலிருந்து வீரர்கள் திடீரென இறங்கும் போது இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உக்தியை கண்டுபிடித்தார்களாம்

இதன் உடலில் வரையப்பட்டுள்ள மாடர்ன் ஆர்ட் போல உள்ள டிசைன்கள் அழகோ  அழகு! ஒரு ஒட்டகசிவிங்கிக்கு இருக்கும் மற்றொன்றுக்கு இருக்காது! ஃபிங்கர் பிரிண்டு போல யுனிக்!  வனத்தில் வாழும் ஒட்டகசிவிங்கிகள் எதிரிகளுக்கு பயந்து படுக்கவே படுக்காது. தூங்குவதல்லாம் நின்றுகொண்டேதான்! அதுவும் குட்டி தூக்கம் தான்! கழுத்தை வளைத்துகொண்டு  5 நிமிடங்கள் மட்டுமே இதன் தூக்கம்மொத்தத்தில் ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே கண் அயரும். இதன் கண்கள் மிகவும் கவர்ச்சி! சிநேகாவின் கண்கள் கூட இதன் கண்களை காணும்போது அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு ஓடியே விடும்!
வனத்தில் வாழும் ஒட்டகசிவிங்கி 25 முதல் 28 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
ஒட்டகசிவிங்கி ப்யூர் வெஜிட்டேரியன். இலை, தழைகள் இதன்  முக்கிய மெனுவாக இருக்கிறது. (ஆப்பிள் கிடைத்தால் அன்று அதற்கு விருந்து! இதற்கு பிடிக்காத  பழம் வாழைப்பழம்.) இவைகளை வளைத்து இழுத்து சாப்பிட இதன் நீண்ட கழுத்தும், நெடிய கரிய நாக்கு பயன் படுகிறது. பெண்கள் பொறாமைப்படும் அளவுக்கு 18 இஞ்ச் நீளம்! கருவேலம் மரத்தில் உள்ள முட்கள் கூட இதன் நாக்கை காயப்படுத்தமுடியாத அளவில் நாவன்மை கொண்டது. இதனுடைய மேல்  உதட்டை சகல திசைகளிலும் ஒரு கருவியாக இயக்கி தன் நாக்கையையும் நாலாபக்கமும் சுழற்றி இலைகளையும், மொட்டுகளையும் நறுநறுக்கென்று ஒருகட்டு கட்டிவிடும். அடிக்கடி இதற்கு பசி எடுப்பதால் ஓயாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். ஒரு நாள் 70 பவுண்டு  எடை உணவு உள்ளே போய்விடும். இரவில் சாகவாசமாக அசைப் போடும்! இதன் திசுக்களில் தண்ணீரை சேமித்து வைக்கும்  அமைப்பு உள்ளதால் நீர் இல்லாமல் நீண்டநாட்கள் கூட இருந்துவிடும். தண்ணீர் சேமிப்புத் திட்டம்?

ஒட்டகசிவிங்கி உயரம் காரணமாக  இதன் எதிரிகளை தொலைவிலேயே கண்டுபிடித்துவிடுகிறது. பொதுவாக இது வேகமாக ஓட இதன் கால் அமைப்பு அதிகம் ஒத்துழைக்காது. ஓடும் வேகத்தை விட தட தடவென்ற சப்தம்தான் அதிகம் இருக்கும். இதன் பின்னங்காலைவிட முன்னங்கால் உயரம் அதிகமாக இருக்கும். இதனுடைய நடக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். முதலில் இடது பக்க கால்களை முதலில் ஒன்றாக  முன் வைக்கும் பிறகு வலது கால்களை ஒரே  சமயத்தில் முன்னோக்கி வைத்து நடந்து செல்லும்.ஆனால் எதிரிகளிடம் இருந்த தப்பிக்க இது 60 கிலோமீட்டர் வேகம் வரைகூட  ஓடுகிறது. ஓடும் போது  முன்னங்கால்களை முதலிலும் பின்னங்கால்களை அதன் பின்னும்  செலுத்தி ஒடும் அப்பொழுது பறப்பது போல் தெரியும்.  இவைகள் 19அடி உயரம் இருந்தாலும் 2 அடி உயரத்தைக் கூடத் தாண்ட முற்படாது. மேலும் நீச்சலிலும் இவை படுவீக் என்பதால் நீரில் இறங்கவே இறங்காது.
 எது எப்படியோ, வான் உயர்ந்த கழுத்தால் உயரமான மர இலைகள் ருசித்து பெருமை பட்டாலும் இது நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க படாதபாடு படும். முன்னங்கால்கலை அசிங்கமாக அகல விரித்து தள்ளாடியபடி குடித்துக் தொலைக்க வேண்டியிருக்கும். இதனால் நீர் கிடைக்கும் போது தேவைக்கு அதிகமாகவே குடித்து சேமித்து வைத்துக்கொள்ளும். இதன் முக்கிய எதிரியான சிங்கம் இந்த சமயத்தைதான் தன் தாக்குதலுக்கு பயன்படுத்திகொள்ளும். அதனால் ஜோடியாவே பல சமயங்களில் நீர்அருந்தும் ஒன்று குடிக்கும் போது மற்றொன்று எதிரிகள் யாரேனும் வருகிறார்களா என நோட்டமிடும்! இதனுடை வழுவான கால்களால் ( High density Bone) தற்காப்புக்காக உதைக்கும் போது சிங்கத்தையே கொன்றுவிடும்!!  அந்த  அளவுக்கு தாக்குதல் கடுமையாக இருக்கும். தன்னுடைய குட்டிகளை வேட்டையாடவரும் விலங்குகளுக்கும் இந்த கிக் பாக்ஸிங் டெக்னிக்தான்! கழுதை போல் இல்லாமல் இவைகள் உதைப்பதற்கு முன்னங்கால்பின்னங்கால் இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தும் திறன் படைத்தது.
ஒட்டகசிவிங்கி ஊமை என்று  கூறுவார்கள்! அது உண்மையில்லை. அமைதியான விலங்கு,சப்தம் அதிகம் செய்யாது. ஆனால் ஒரு வகையான முக்கல்,முனகல், முறுகல், கீழ்தாயில் சப்தம், இருமல், புல்லாங்குலல் வாசிப்பு,பன்றி உறுமல்   போன்ற சப்தம் என பல ஒலிகளை வெளிப்படுத்துகிறது. ஆண் பெண்ணை அழைக்க இரும்மல் சப்தம், பெண் தன் குட்டியை அழைக்க விசில் போன்ற சம்தம், குட்டிகள் ஒரு வகையான மியாவ் சப்தம் செய்து மொழிகளை பரிமாறிக்கொள்கிறது. ஒரு  சூடான ஆராச்சியில் ஒட்டகசிவிங்கிகள் அல்ட்ரா சவுண்ட் மூலம் தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்கிறது என கண்டுபிடித்துள்ளார்கள்
 ஆண் பெண் என பேதம் இல்லாமல் ஒட்டசிவிங்கிகளுக்கு இரண்டு எலும்பினால் ஆன குட்டை கொம்புகள் தோலால் போர்த்தப்பட்டு பக்குவமாக இருக்கின்றன். ஆண் ஒட்டகசிவிங்கிக்கு பெரிய கொம்பு, அதில் குஞ்சம் இருக்காது! பெண் ஒட்டகசிவிங்கிக்கு சிறிய கொம்பு! அதில் குஞ்சம் போல் முடி அலங்காரம் இருக்கும். பிறக்கும் போதே கொம்புகளோடு தோன்றும் விலங்கினம்! சிலவற்றிற்கு கொம்பிற்கு நடுவில் எக்ஸ்ட்ரா இருக்கும்! இது கிழட்டு ஒட்டகசிவிங்கி என அர்த்தம்!!
ஒட்டகசிவிங்கியின் உடலில் உள்ள முடிகளில் உள்ள சிறப்பு இராசாயனம் கிரிமி நாசினியாகவும் ஒட்டுண்ணிகள் மற்றும் பேண்களிடமிருந்து காக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன. 11 வகையான வாசனை வேதியல் பொருள்கள்  இதன் முடியில் இருந்தாலும் இன்டோல் மற்றும் 3- மெத்திலின்டோல் ( indole and 3-methylindole)   வேதியல் பொருள்கள்தான் ஒட்டகசிவிங்கியின் மேல் உள்ள வாசனைக்கு காரணமாக அமைகிறது.. ஆண் ஒட்டகவசிவிங்கின் உடம்பில் வாசனை அதிகம்! பெண் ஒட்டகசிவிங்கியை கவரத்தான்!
இனவிருத்திக் காலம் ஜூனில் தொடங்கி செப்டம்பரில் தான் முடியும். பெண் வாடையால் ஈர்க்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கியார் கீச்..கீச்...” என்பறு லோ வாய்சில் முனகிக் கொண்டிருக்கும், பெண் ஒட்டகசிவிங்கி சிறுநீர் விட்டால் ஆண் ஒட்டக சிவிங்கி ஓடோடி வந்து அதை ருசி பார்த்துவிடும். சிறுநீர் வரா விட்டாலும் பெண் ஒட்டகசிவிங்கியின்   அந்தபுர பகுதியை தூண்டி வர வைத்துவிடும்! ஆண் ஒட்டகசிவிங்கி சிறுநீரின் ருசி பரிசோதனையில் எந்த பெண் ஒட்டகசிவிங்கி ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் ஆதிக்கத்தில் கலவிக்கு தயாராக உள்ளது என எளிதில் எந்த லேபுக்கும் அனுப்பாமலேயே கண்டுபிடித்துவிடும்! பின் தன் இச்சைக்கு இணங்க வைக்கும் அடுத்த வேலையை ஆரம்பித்துவிடும். ஆனால் வேறுவோரு ஆண் ஒட்டகசிவிங்கியும் ருசிப்பார்த்து போட்டிக்கு வந்துவிடும்.
 அப்பொழுது பெண் ஒட்டகசிவிங்கி தன்னோடு இணைய நினைக்கும் இரண்டுக்கும் கழுத்து போட்டி நடத்தும்.ஆண் ஒட்டகசிவிங்கிகள் கழுத்தை கொண்டு மல்யுத்தம், வாள் சண்டை  செய்வதை பெண் ஒட்டகசிவிங்கி ஆனந்தமாக ரசித்து அதில் வெற்றி பெறும் வீரனோடு இணை சேர தனியாக ஓரங்கட்டி, முதலில் நேருக்குநேர் முகத்தோடு முகம் உரசிக் கொள்ளும் பின்னர் இனச்சேர்க்கை இனிதே நடந்தேரும்! என்கிறார் டாக்டர். "மன்மதன்" சந்திரசேகரன்
50% ஆண் ஒட்டகசிவிங்கிகள் கழுத்தோடு உரசி சண்டையிடும் போது முடிவில் அது ஹோமோ செக்ஸில்  முடிந்துவிடுகிறது. கழுத்துபகுதி நரம்பு மண்டலம் ஒட்டக சிவிங்களின் செக்ஸ் உணர்வை தூண்டிவிடுகிறது! பெண் ஒட்டகங்களிடையே 1% தான் லெஸிபியன் செக்ஸ் நடைபெறுகிறதாம்.
 கலவிக்கு பின் பெண் ஒட்டகசிவிங்கி 400 முதல் 460 நாட்கள் கற்பத்திற்கு பின்  மெத்தென்று இருக்கும் இடத்திலில் பின்னங்கால்களை விரித்து நின்று கொள்ளும். சுமார் 7 அடி உயரத்திலிருந்து  தொப்புகுட்டியென்று 6 அடி உயரம் உடைய ஒரு குட்டியை கீழே போட்டு பிரசவிக்கும்.  பெற்றெடுக்கும். சில சமயங்களில் இரட்டை குட்டிகளையும் போடும். 20 நிமிடத்தில் பால் குடிக்கத் தொடங்கும். ஆண் ஒட்டகசிவிங்கி குட்டியை வளர்ப்பதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை என டாட்டா காட்டி கிளம்பிவிடும். பெண் ஒட்டகசிவிங்கி தன்னோடு வைத்து 18 மாதங்கள் வரை வளர்க்கும். தாய் ஒட்டகசிவிங்கிகள் எல்லாம் வெகு தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தால் ஒரு தாய் ஒட்டகசிவிங்கியை ஆயாவாக நியமனம் செய்து அனைத்து குட்டிகளையும் இதன் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றுவிடும். குட்டிகளை இரையாக்க முயலும் சிங்கம், புலி, சிறுத்தை, நரி போன்றவற்றிலிருந்து காப்பாற்ற இந்த ஆயா ஒட்டகசிவிங்கி உதை விடுவதில் வல்லுனராக இருந்து காப்பாற்றும்.

1 comment:

  1. Sir there are some theories depicting Okapi as the ancestor of giraffe

    ReplyDelete

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...