19 February, 2012

இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.

மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.




எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் அழகான மனைவியின் கையால் பரிமாரப்பட்டு சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!

இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?

மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும்.

இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

நீர்க்கோவை குணமாகும்!

நீர்க்கோவை நோயை சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!

செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை மிக்ஸி மூலம் சாறாக மாற்றுங்கள். உங்களுக்குப் பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருந்துங்கள். இந்தச் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். (கொஞ்சம் கசப்பை மட்டும் பொறுத்துக் கொள்ளவேண்டும்.)மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டணி அமைத்து பதார்த்தமாக மாற்றியும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?

இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். ( இருக்கும் அழகு!) இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல ( பக்கவிளைவு இல்லாத) தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

2 comments:

  1. பேச்சு வழக்கில் மணத்தக்காளி என எழுதியுள்ளீர்கள். மணித்தக்காளி என்பதே சரி. மற்றபடி, இடுகைகள் அனைத்தும் மிகவும் தேவையானதே. நன்றி.

    ReplyDelete
  2. வருகை புரிந்தமைக்கு நன்றி. மணித்தக்காளி என்பதே சரி என்ற தகவலுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...