27 September, 2025

மலைப் பாம்பின் இறைச்சி இனிப்பாக இருக்குமாமே?


ஆணைத் தேடிச் செல்லும் பெண் மலைப்பாம்பு 

மூவாயிரத்துக்கும் மேல் உள்ள பாம்பு வகைகளில் மலைப் பாம்புதான் அரதப் பழசுரகம்! 13 கோடியே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது! முதன் முதலில் தோன்றிய மூதாதையர்!!  விஷம் இல்லாத பாம்புகள்!
ஸ்குவாமேட்டா ( Squamata) ஆர்டரைச் சார்ந்த பைத்தோனிடே(Pythonidae) குடும்பத்தை சார்ந்த இந்திய வகை பாம்பு 19 அடி நீளத்துக்கு இருக்குமாம். ஆஸ்திரேலியாவில் 20 அடியும் தென் அமெரிக்காவின் அனகோன்டா 25 அடிக்கும் மிகாமலும் இருக்கின்றன! ஆனால் ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Pythons,) என்னும் மலைப் பாம்புதான் வாழும் பாம்புகளில் பெரியது இது 35 அடி நீளம் கூட ஒய்யாரமாக வளர்ந்துத் தள்ளும்! எடை 350 பவுண்டைத் தாண்டும் வயிற்றுப் பகுதியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மட்டும் 3.5 அடிஇருக்கும்!

பைத்தான் மொலூராஸ் (Python molurus) எனப்படும் நம்ம ரெகுலர் மலைப்பாம்பு வெள்ளையும் மஞ்சளும் கலந்த மண் நிறத்தில் இருக்கும் உடலின் மேற்புறத்தில் சதுரத் திட்டுக்கள் தலை முதல் வால் வரை வரிசையாக அமைந்திருக்கும். இதிலும் இரண்டு பிரிவு. 1. கருப்பு தலை மலை பாம்பு 2.இந்திய பாறை மலைப் பாம்பு





பர்மீஸ் (Burmese Python (Python molurus bivittatus) ) மலை பாம்பு ரகங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறதாம்! அதில் கேரமல்பர்மீஸ் ரகம் பார்க்க கொள்ளை அழகு!
 ‘மோல்டிங்எனப்படும் தோலுரித்தல் ஆண்டுக்கு ஐந்தாறு தடவை நடக்கிறது. உடலைப் போர்த்தியிருக்கும் பாலிதீன் உறை போன்ற தோலை இளம் பெண் தன் டைட்டான ஜீன்ஸ் பேண்ட்யை கழட்டுவது போல இவை கழட்டித் தள்ளுகின்றன. முதலில் மூக்குப் பகுதியில் தோன்றும் உறை நெகிழ்வை ஏதேனுவோரு கல்லிடுக்கில் அல்லது முள்ளில் சிக்க வைத்து பொலபொலவெனத் தோலுரித்து விட்டு நிர்வாணமாய்? ப்யூட்டி பார்லரில் இருந்து மேக்கப் முடித்து வெளியே வரும் பிகர் கணக்காய் வெளிப்படும் அப்புறம் சுமார் இரண்டரை மாதங்களுக்கு இந்தப் பளிச் அலங்காரம்தான்! தோலுரித்த மலைப் பாம்பு தன் மேல்டேட்டூசெய்த டிசைன் ஆக நல்ல வெளிச்சத்தில் பார்த்தால் பல நிறங்களோடு அதன் மேனி 

மலைப்பாம்பின் தோல்! அருகாமையில்!!
 அடர்ந்த காடு பகுதிகளும் ஆற்றோரப் படுகைகளும் இவைகளுக்கு பிடித்தமான வாழும் பகுதி. இவற்றில் காட்டுவாசி மலைப் பாம்புகள் ஜாலியாக மரங்களில் உயரமாக ஏறி கிளையோடு கிளையாக தொங்கி கொண்டே தூங்குவது வாடிக்கை! ஆற்றோரவாசிகள் கரையோரத்தில் மூக்கை மட்டும் வெளியே விட்டு நீருக்குள் அமிழ்ந்து கிடப்பது பழக்கம்.



தேவைப்பட்டால் தண்ணீரில் அட்டகாசமாய் நீச்சலடிக்கும். மேலும் தண்ணீருக்குள் மூச்சைப்பிடித்து அரைமணி நேரம் கூட தம் புடிக்குமாம்!!
மலைப் பாம்புகள் மகா சோம்பேறிகள் ஆபத்து காலத்தில் கூட அப்படியொன்றும் வேகமாகத் தப்பிக்கமுடியாது. இரையை கண்டால் மட்டும் கொஞ்சம் வேகமாக இயக்கம் இருக்கும்

மேக்ஸிமம் அளவிற்கும் விரிக்ககூடிய தன்மையை கொண்ட தாடை எலும்புகள் இணைக்கப்படாத  வாயை பிளந்து கொண்டு தன்னுடைய பிளவு நாக்கின் (Vomeronasal organ) உணர் சக்தி, மற்றும் மோப்ப சக்தி மூலம் இரையை நோக்கி வேகமாக முன்னேறும் போது விலா எலும்புகளின் அலைஅலையான 
இயக்கத்தை பயன்படுத்தி ஒரே நேர்கோட்டில் செல்லும். அப்பொழுது துளி கூட
உடலை நெளிக்காது. இரையை நெருங்கியவுடன் தன் வால் பகுதியை வீசி 
இரையின் உடலை ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். பிடியை மென்மேலும் இறுக்குவதால் இரை சுவாசத்துக்கு ஏங்கி உயரிழக்கும்இறந்த இரையின்  உடல் முழுவதையும் ஒரு முறை நாக்கால் முகர்ந்து பார்த்து விட்டு (ஆம் பாம்புக்கு நாக்குதான் மூக்கு) படிபடிப்படியாக விழுங்கத் தொடங்கும். முன் ஜாக்கிரதையாக தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பின்  அளவற்றுச் சுரக்கும் உமிழிநீரின் உதவியோடு கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோமோஷனில் டைட்டானிக் கப்பல் போல இரை உள்ளே போய்க் கொண்டிருக்கும். உள்ளே விழுங்கப்படும் இரை தப்பி  வெளியே வராமல் இருக்க மலைபாம்பின் பல் அமைப்பு உள்ளே வளைந்து சிறப்பு ஒன்வே லாக்காக இருக்கும். இப்படியொரு  நல்ல விருந்தை முடித்துக் கொண்ட மலைப்பாம்பு இடத்தை விட்டு நகர முடியாமல் அசைவற்றுக்கிடக்கும் வலுக்கட்டாயமாக நகர வைத்தால் விழுங்கிய இரையின் கொம்புகள், நகங்கள், பற்கள் போன்ற கூரிய பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும். அதனால் தான் இரைக்குபின் அசைவற்று படுத்து கிடக்கும். மனிதர்களின் தோள்பட்டை விரிந்துள்ளதால் மலைப்பாம்புக்கு மனிதன் வேண்டாத இரை! இருப்பினும் குழந்தைகள் கிடைத்தால் இரையாக்கிவிடும். ஒரு பெண்ணை மலைபாம்பு தாக்கி விழுங்க முயற்சி செய்துள்ளது. ஏன் விஷம் உள்ள நாகபாம்புடன் கூட மலைபாம்பு மோதியுள்ளது.
மற்ற விலங்குகளை போல மலைப்பாம்புகள் தினசரி சாப்பிட்டு ஏப்பம் விட்டு அதை அன்றே ஜீரணித்து மறுபடியும் விருந்துக்கு தயாராவதில்லை. உட் கொண்ட இரையின் பருமனையும் சீசனையும் பொறுத்தே ஜீரணம் ஆகும். கோடைக்காலத்தில்  எலி, கோழி, வாத்து போன்றவை ஒரு வாரத்திலும், முயல், பெருச்சாளி, முள்ளம்பன்றி போன்றவை இரண்டு வாரத்திலும் ஆடு, மான், நரி போன்றவை மூன்று வாரத்திலும் என ஜீரணமாக மலைபாம்புகள் சார்ட் வைத்துள்ளது. அதுவரை இவைகள்
நான்டயட்என்று அருகில் வரும் இரைகளிடம் கூறிவிடும். இரை எதுவும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் கூட ஒரு மலைப்பாம்பு உயிருடன் இருக்கும்அந்த சமயங்களில் தன்னுடைய வயிறு, இதயம், அகியவற்றின் அளவு  மற்றும் ஜீரண அமிலத்தை சுருக்கி கொள்ளும் சிறப்பு வசதியை கொண்டிருக்கிறது. இரை உள்ளே நுழைந்தவுடன் மேஜிக் போல் எல்லாமே அதிகம் ஆகிவிடும்
ஒரு ஆட்டை முழுமையாக  விழுங்கும் மலைப் பாம்பு


5 முதல் 6 வயது முடிந்து விட்ட மலைப் பாம்புகளில்  இனச்சேர்க்கை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் மட்டுமே. இந்தச் சீசனில் ஈஸ்ட்ரோஜன்ஆதிக்கத்தில் இருக்கும். (இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இனச்சேர்க்கைக்கான முன் ஏற்பாடாக புதரில் அல்லது மரபொந்துகளில் புரூமேஷன் (Brumation ) தயாரிப்பு பணியை செய்யும்.) இந்த தருணத்தில்  பெண் மலைப் பாம்புக்கு துணை தேவைப்படும். இதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஆண் மலைப் பாம்பின் இருப்பிடம் தேடிச் செல்லும் ஆனால் அருகில்  வந்தவுடன் பெண்மைக்கே உரிய இலக்கணத்துடன் மிக அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே சமிக்கை தரும்.. அந்த நேரம் ஆணுக்குத் தோதாக இருந்தால் மட்டுமே  காதல் விளையாட்டு! இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கி நோ சொல்லிவிடும். கனமான இரை வயிற்றுக்குள் இல்லாதவரையில் ஆண் மலைப் பாம்புகள் தன் சோம்பேறித்தனத்தை தூர வைத்துவிட்டு போனால் போகிறது என்பது போல் இணைக்கு இணங்கிவிடும்!

காதல் விளையாட்டின் போது ஒன்றோடொன்று  சுற்றி பின்னிப் பிணைந்து கொள்ளும். உடலை இறுக்கி அந்த இறுக்கத்தையும் ரசித்தபடி உடலின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் ஸ்பரிசிக்கும் வகையில் நீண்ட நேரம் ஆலாபணை நடத்தும். மலைப்பாம்பின் வால் பகுதியில்தான் மேற்படி சமாச்சாரங்கள் உள்ளன. ஆண் மலைபாம்புக்கு வலது புறம் ஒன்று இடது புறம் ஒன்று என இரண்டு ஆண் குறிகள் உள்ளது. (Hemipenes)  சூழ்நிலைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு விஷயத்தை இனவிருத்திக்கு பயன்படுத்தும். அந்த  வால்சண்டையில் வால்கள் சரியாக இணையும் பொழுது வெற்றிகரமான சேர்க்கை நடந்து முடியும்..பிறகு இரண்டும் மங்களம் பாடி இனிதே பிரிந்துவிடும்.

வாலோடு வால்முக்கிய நிகழ்வு


சினைமுட்டைகளை வயிற்றில் உள்ளடக்கிய மலைப் பாம்பு

மூன்று மாதங்களில் பெண் மலைப்பாம்பு 12 முதல் 36 முட்டைகள் இடும். உடலை ஸ்பிரிங் போல் சுற்றி முட்டைகள் 58 நாட்கள் தன்னுடைய உடலில் அதிக அளவில் உஷ்ணத்தை உருவாக்கி  அடை காக்கும்.


பிறக்கும் குஞ்சுகள் 2.5 அடி நீளத்திலிருக்கும். முதல் தோலை உரிக்கும் வரை முட்டைக்குள்ளேயே இருந்துவிட்டுதான் பின் வெளியில் வரும். வெளியே ந்தவுடன்  தன் முதல் வேட்டையை ஆரம்பிக்கும். அத்துடன்  பெண் மலைப்பாம்பின் தாயின் பராமரிப்பும் முடிந்துவிடும்.
பிறந்த குட்டி மலைப்பாம்புகள் காட்டுப் பூனை முதல் நரி வரை பல எதிரிகளிடம் தப்பினால் 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்த  மலைப் பாம்பு ஆகிவிடும். வளர்நத பாம்புகளுக்கும் சிங்கம், புலி, மனிதன் என பல எதிரிகள் இருப்பதால் இதனுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மலைப் பாம்பு தன் எதிரிகளிடமிருந்து தப்பிவிட்டால் தனது ஆயுள் காலம் 20 ஆண்டுகள் வரை வாழ்ந்துவிடும்!
மனிதர்களின் மலைப்பாம்பு பயன்பாடு மலைக்க வைக்கிறது. மலைபாம்பின் இரத்தம் தாய்லாந்தில் மார்க்கட்டில் ஏக கிராக்கி! வீரியத்தை அதிகப்படுத்துகிறதாம்!!
இந்தியாவில் மலைப்பாம்பின் கொழுப்பு முக்கியமாக கேரளா பகுதியில் மருந்து பொருளாக பயன்படுகிறது. எதற்கு என்று சொன்னால் ஆஸ்துமா நோயாளிகள் கேரளா ஆயுர்வேதிக் மருந்துகளை சாப்பிட தயங்குவார்கள்.
மேலை நாடுகளில் மலைப்பாம்பின் தோலில் செய்த அலங்கார  பொருள்கள், பர்ஸ், கை பை விற்பனை சக்கைப்போடுபோடுகிறது.
சீனாவின் சிலப் பகுதிகளில்  மலைபாம்பின் இறைச்சி உணவாகிறது! அவர்களின் கூற்றுப்படி மலைப் பாம்பின் இறைச்சி சர்க்கரை போல் இனிக்கிறதாம்! யாரேனும் முயற்சித்து உண்மையா என  கூறுங்களேன்!!



கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!


பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.
முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்
தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.
ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள். அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.
வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.

08 November, 2020

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை


கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்

4சுழி 5சுழி போட்டானாம்! 

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 

4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?


இது எப்படி இருக்கு? 


தமிழ் எழுத்துகளில் -

ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 

மூனுசுழி ண என்பதும் தவறு!


ண இதன் பெயர் டண்ணகரம்,

ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.


மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)


தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)


இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)


வேற மாதிரி சொன்னா 

இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 

(வர்க்க எழுத்து-ன்னா, 

சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)


இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 

இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 

எழுத்துப் பிழையும் குறையும். 


எப்புடீ?


மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.

ஏன்னா அது டண்ணகரம்.


கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.

ஏன்னா அது றன்னகரம். 


இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்

ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 

வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)


இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 

நெனைக்கிறவங்க மட்டும்

தொடர்ந்து படிக்கலாம். 

(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 

அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)


நல்ல உச்சரிப்புக்கு..

செய்தியாளர் ஷோபனா ரவி

தமிழில் எந்த எழுத்தின்  பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண  எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 


தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.

இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)

இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?


உதாரணமாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.


உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்


இதை எல்லாரும் படித்திருப்போம்-

வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)  இதுவும் தெரிஞ்சதுதான்.


எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.


சொற்களில், மெல்லினத்தை அடுத்து 

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)


க ங – எங்கே – ங் க 

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப


இடையின ஆறெழுத்தும் 

அவற்றின் பெயருக்கேற்ப 

(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 

மென்மையாகவும் இன்றி இடையினமாக) 

செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற


அவ்வளவு தாங்க...


உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ 

ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!

நெட்டை னா குட்டை

பள்ளம் னா மேடு

தொப்பை னா சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)


ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?

முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.


இதே மாதிரித்தான் -

சின்ன ர என்பதும் தவறு!

பெரிய ற என்பதும் தவறு! 


ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது 

- மரம், கரம், உரம்


ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி 

- மறம், அறம், முறம்


இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!


வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் 

இடையில வர்ரது இடையினம்.


அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...


வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)


வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...


இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான் ! 


இதே மாதிரித்தான் 

உயிரெழுத்தில் 

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

 ஐ-இ  

ஒ-ஓ - என வரும இன  எழுத்துகள் 

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை 

(ஓசை ஒழுங்கு) அறிந்து 

எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும், 

படிப்பவர் நினைவில் நிலைக்கும்.


04 November, 2020

ஓட்டை பானை!

 குறையா நிறையா?....


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்.தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு

பானைகளை வைத்திருந்தான். அந்தப்

பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி

பெருமை. குறையுள்ள பானையைப்

பார்த்து.எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.


இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.


"ஐயா! என் குறையை நினைத்து நான்

மிகவும் கேவலமாக உணர்கிறேன்.

உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை

நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"


அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா?


உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது

எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய

தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.


அவற்றை வைத்து நான் வீட்டை

அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை

விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. 


அடுத்தவர் பேச்சைப்

பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

02 November, 2020

செல்வம்- வெற்றி- அன்பு

 ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

சாவியும் சுத்தியலும்

 🔴ஒரு குட்டிக் கதை👌


🔴ஒரு நாள் 🔑சாவியை பார்த்து 🔨சுத்தியல் கேட்டது:

நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன்.ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க மிகவும் சிரமப்படுகிறேன்.ஆனால் நீ சுலபமாக திறந்து விடுகிறாயே எப்படி......❓


🔴🔑அதற்கு சாவி சாென்னது:

நீ பலசாலி தான் ஒத்துக்காெள்கிறேன் ஆனால் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்❓


🔴 நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன்.❗


🔵எப்பொழுதும் இதயத்தை தொடுங்கள்.... அன்பால் உலகை ஆளுங்கள் ❗👌

விலை போகும் மகிழ்ச்சி!

 ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. 


கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு 

அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.


வண்ண வண்ண விளக்குகள், 

அழகான நதிகள், 

மரங்கள், 

எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று 

அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.


ஆனால் 

போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.


அது பறந்து போகும் போது 

ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு 

அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? 

அவரிடம் குருவி வழி கேட்டது.


“எனக்கு முழு விபரம் தெரியாது. 

தெரிந்த வரை சொல்கிறேன். 

அதற்கு விலையாக 

நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் 

சரி என்றது. 

குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் 

அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,


அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.

பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,

“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.

பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். 

உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு சிறகுதானே, 

தந்தால் போச்சு என்று 

குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.


இப்படியே அந்தக் குருவி, 

அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு 

குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்

வழி சொன்னவர்களுக்கெல்லாம் 

ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.


முடிவாக, 

அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.


வந்து விட்டோம்.....

வந்தே விட்டோம்......

இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், 

இதென்ன....

ஏன் என்னால் பறக்க முடியவில்லை.


ஐயோ, 

என் உடம்பெல்லாம் கனக்கிறதே.

கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.

பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.


குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.

அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் 

அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.


இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது....?!?!?

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...