27 March, 2013

பசியைத் தூண்டும் புடலங்காய்…


நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர். இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம். தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.

இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதனால் நோயின் பிடியில் சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம். காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.
இத்தகைய காய்களில் நாம் அனைவரும் அறிந்த புடலங்காய் பற்றியும் அதன் மருத்துவப் பயன் பற்றியும் அறிந்துகொள்வோம்.

இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை. இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது சுவை மிகுந்த காயாகும். இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.

இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.

போகம் விளையும் பொருந்தி வளருமையாம்

ஆகமதிற் பித்த மணுக்குங்காண்-மேக

புடலங் கவியளகப் பாவாய் கேணாளும்

புடலங் காய்க்குள்ள புகழ்

-அகத்தியர் குணவாகடம்

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

புடலங்காயின் பயன்கள்

* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

* குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.

* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

* கண் பார்வையைத் தூண்டும்.

* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.

இந்திய நறுமண பொருள்கள் மூலம் புதிய சிகிச்சை முறைகள்

இந்திய நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள் பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. உடம்பில் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில் குர்குமின் செயல்பாடு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இணைப்புகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி ஆகியவை வெகுவாக குறைகின்றது. இதனால் ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பென் மாநிலத்தில் நடைபெற்ற மற்றொரு ஆய்வில், நறுமண பொருள்களான ரோஸ்மேரி, ஆரிகேனோ, இலவங்கம், மஞ்சள், கருமிளகு, கிராம்பு, வெள்ளை பூண்டு பொடி மற்றும் பப்ரிகா ஆகியவை கலந்த உணவு ஒரு பிரிவினருக்கு பரிமாறப்பட்டது. மேலும் மற்றொரு பிரிவினருக்கு நறுமண பொருள்கள் இல்லாத உணவு தரப்பட்டது. இதில், நறுமண பொருள்கள் இரத்தத்தில் மேற்கொள்ளும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், டிரைகிளிசரைடு செயல்பாடு 30 சதவீதம் குறைந்ததும், 13 சதவீதம் ஆன்ட்டியாக்சிடன்ட் செயல்பாடு அதிகரித்ததும் மேலும் தேவையற்ற நிலையில் இன்சுலின் பயன்பாடு 20 சதவீதம் குறைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இவ்விரு ஆய்வுகளும் இந்திய நறுமண பொருள்கள், மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

24 January, 2013

ஒரு கோப்பை பானம் உடலுக்கு நல்லது?



டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்லதல்ல,
பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல்வதுண்டு’ இவற்றில் எது உண்மை?…
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல.
உண்மை: ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்ëகுக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
டீ குடிப்பதால் பல்லில் கறை ஏற்படும்.
உண்மை: டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `டீ’ச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.
டீ குடிப்பது வயிற்றுவலிக்கு காரணமாகும்.
உண்மை: வயிற்றுவலி (அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும்போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்ëகள்.
டீ எலும்புகளுக்கு கெடுதல் விளைவிக்கும்.
உண்மை: டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டீ குடிப்பதனால் இரும்பு சத்து உடலில் சேர்வது குறைகிறது.
உண்மை: இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்ëகள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.
உடலில் தண்ணீர் பற்றாக்குறை எனப்படும் `டிஹைட்ரேஷனை’ தேநீர் ஏற்படுத்தும்,
உண்மை: மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.
டீ குடித்தால் உடல் எடை கூடும்
உண்மை: டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.
மேற்கண்டவை, புதிய ஆய்வுத் தகவல்கள். இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில், “மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக் கும் நல்ல சக்தியை அளிக்கின்றன. உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ, உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.

22 December, 2012

மூலத்தை துரத்தும் துவரை வேர்

நாம் உண்ணும் உணவு உணவுப்பாதையில் சீரணிக்கப்பட்டு திடக்கழிவாக மலவாசலில் வெளியேறாவிட்டால் பல உபாதைகள் தோன்ற ஆரம்பித்துவிடும். இதற்காக மிகவும் பிரயத்தனம் செய்து மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயிலில் வலி மற்றும் புண்கள் தோன்றலாம். இதே நிலை நீடிக்கும்பொழுது மலப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க சிரமம் உண்டாவதுடன் ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது உட்புறத்தில் சிறுசிறு கட்டிகளோ அல்லது வீக்கமோ தோன்றி மூலநோயாக மாறிவிடுகிறது.
குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், வாயுவை பெருக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உட்கொள்பவர்கள், கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூலநோய்க்கு ஆட்படுகிறார்கள். பரம்பரையாகவும் மூலநோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஆசனவாய் பகுதியில் கிருமிகள் தங்கி வளருவதால் ஆசனவாயில் அரிப்பு உண்டாகி, சில நேரங்களில் மூலம் முற்றிப்போய் ரத்தமும், சீழும் மலத்துடன் கலந்து வெளியேற ஆரம்பிக்கிறது. பலருக்கு இதன் ஆரம்ப அறிகுறி தெரியாமல், நோய் அதிகரித்த பின்பே பலவித உபாதைகள் தோன்றுகின்றன.
மூலநோய் உள்ளவர்கள் வாயுவை பெருக்கக்கூடிய கிழங்கு வகைகள், பயறு வகைகள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், காரம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பதுடன், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையும், அதிக எடை தூக்குவதையும், வாகன பிரயாணம் செய்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சாதாரண மூலம்தானே என்று அலட்சியம் காட்டினால் அது பவுத்திரமாகவும், ஆசனவாய் அடித்தள்ளலாகவும் மாறிவிடுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் துவரையின் வேரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. கஜானஸ் கஜன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த துவரைப் பயிர்கள் உணவுப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. சாணபுஷ்பிகம் என்ற சமஸ்கிருத பெயர் கொண்ட துவரையின் வேரில் பெனில் அலனின், ஐசோபுளோவின், ஐசோபுளோவோன், ஸ்டீரால், ஆன்த்ரோகுயினோன், டிரைடெர்பினாய்டு மற்றும் கஜானால் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை மெல்லிய சதைப்பகுதிகளில் ஏற்படும் வீக்கம், கொப்பளம், கட்டி போன்றவற்றை கரைத்து அங்கு தேங்கிய ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.
துவரை வேரை நிழலில் உலர்த்தி முடிந்தளவு பட்டையை உரித்து, நன்கு பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை தேன் அல்லது வெண்ணெயுடன் கலந்து சாப்பிட, ஆசனவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் மற்றும் சதை வளர்ச்சி நீங்கும். துவரம் பருப்பிலும் இந்த வேதிச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் நன்கு வேகவைத்து உட்கொண்டு வந்தால் மலவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் நீங்கும்.துவரை வேரிலிருந்து மருந்து செய்ய இயலாதவர்கள் துவரை வேர் சேர்த்து செய்யப்பட்ட கன்கனியாதிவடி என்னும் ஆயுர்வேத மாத்திரையை காலை-1, இரவு-1 உணவுக்குப் பின்பு சாப்பிட்டுவரலாம். அத்துடன் விளக்கெண்ணெயை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து ஆசனவாயில் தடவலாம்.

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...