07 July, 2014

பல பெண்களுடன் சுத்துகிறவன் யார்?

பல பெண்களுடன் சுத்துகிறவன் யார்?


அப்பாவுக்கு சன்யாசிகளின் தொடர்பு அதிகம். 50 வயது ஆன பின்னர் திருக்கோயிலூர் ஞானாநந்த சுவாமிகள், வடகுமரை அப்பண்ண
சுவாமிகள், திருவண்ணாமலை யோகி ராம்சூரத் குமார் சுவாமிகள், புதுக்கோட்டை சாந்தாநந்த சுவாமிகள் ஆகியோரிடம் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி இவர்களைச் சந்திக்கச் செல்வார். அந்த சுவாமிகள் அனைவருக்கும் அப்பாவைப் பார்த்தவுடன் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவுக்கு நெருக்கம்.அவர்கள் ஆசிரமத் தேவைகளுக்கும், விழாக்கால ஏற்பாடுகளிலும் அப்பாவை ஈடுபடுத்துவார்கள். அப்பாவும் உற்சாகமாக ஈடுபடுவார்.

ஒரு முறை அப்பா ஞானாநந்த சுவாமிகளை சந்தித்தபோது,"அவ்விடத்தில் திருவலத்து சுவாமிகளை இன்னும் தரிசிக்கவில்லை இல்லையா?"என்று கேட்டார்.

"ஆமாம் சுவாமி!"

"அப்போ ஒருதரம் அந்த சுவாமிகளைப் போய் பார்த்து ஆசி பெற்று வரவும்."

"உத்தரவு சுவாமி!"

ஞானான‌ந்தரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அம்மாவையும் அழைத்துக் கொண்டு திருவலம் என்ற ஊருக்குச் சென்றார் அப்பா.  திருவலம்  வேலூருக்கு மிக அருகில் உள்ள சிற்றூர்.அங்குள்ள‌ அருள்மிகு வலந்தீஸ்வர சுவாமியைப் போற்றிப் பதிகம் பாடியுள்ளார் ஞான சம்பந்தர்.

இத் திருத்தலத்தில்தான் விநாயகரும், ஆறுமுகரும் மாங்கனிக்காக உலகை வலம் வரும் போட்டியில் ஈடுபட்டனராம். விநாயகர் அம்மை அப்பனை வலம் வந்து கனியைப்பெற்றுக்கொண்டதும்,ஆறுமுகர் உலகைச் சுற்றி வலம் வந்து, பின்னர் விநாயகரின் வெற்றியை அறிந்து கோபித்து, பழனிமலைஏறி ஆண்டிக்கோலம் கொண்ட தலவரலாறு கொண்ட தலம் திருவலம். இறைவனைத் தெய்வீகப் பிள்ளைகள் வலம் வந்ததால் ஊருக்கே திருவலம் என்று பெயர் வந்தது. அருள்மிகு வலந்தீஸ்வ‌ரசுவாமி கோவிலின் வாயிலின் அருகில் ஓர் திண்ணயையே தன் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார் மெளன சுவாமிகள்.ஒரு காலத்தில் காஷ்ட மெளனமாக சுவாமி இருந்துள்ளார்.அப்போது மக்கள் அவரை மெளனி என்று அழைத்துள்ளனர்.

அவர் பேசத்துவங்கியும் கூட அவருக்கு மெளனசுவாமி என்ற பெயரே நிலைத்துவிட்டது. சுவாமிகளுடைய வகுப்பு தேர் கட்டும் ஆசாரிகளின்
வகுப்பு என்பர்.விஸ்வ கர்ம  வகுப்பில்  பொற்கொல்லர்கள், மரத்தச்சர்கள், இரும்புக் கொல்லர்கள்,சிற்பி அல்லது ஸ்தபதி ஆகியோர் அடங்குவர். தேர் கட்டும் ஆகமவிதிகளில் நல்ல‌ பயிற்சியும் பட்டறிவும் உடையவர் சுவாமிகள். திருப்பதிபோன்ற பெரிய‌ கோவில்களுக்குக்கூட சுவாமிகள் தேர் அமைத்தார் என்று வாய் மொழிச்செய்தி உண்டு.தொழில் வழி வகுக்கப்பட்ட சமுதாய அமைப்பில் தன் தர்மத்தை யார் ஒருவன் சரியாகச் செய்கிறானோ, அதாவது கர்மாவைச் சரியாகச் செய்கிறானோ, அவ‌னுக்கு முக்தி நிச்சயம் என்பதும்,
இப்பிறப்பிலேயே இறைவனிடம் கலந்து உறவாடும் ஆனந்த நிலையில் மூழ்கித்திளைக்கலாம் என்பதற்கும் மெளன சுவாமிகள் நல்ல எடுத்துக்காட்டு. 

நவீன படிப்பறிவு இல்லாதவர். வேத வேதாந்தங்கள் எதுவும் பாடசாலையில் கற்காதவர்.ஆயினும் இறை அனுபூதி கைவரப்பெற்ற மஹான்.அந்த ஊர் மக்களை குடிப்பழக்கம், புலால் இரண்டையும் தவிர்க்கச் சொல்லி
எல்லாக்குடும்பங்களிடமும் சத்தியம் பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றவர். சத்தியத்தை யாராவது மீறியது தெரிந்தால்  கோவில் கோபுரத்தில் ஏறிக் குதித்து விடுவதாக அச்சம் கொடுத்துக் கூடப் பலரையும் திருத்திய வரலாறு சொல்வார்கள்.

முன்னர் கூறியது போல இந்த சுவாமிகளைப் தரிசிக்க அப்பாவும் அம்மாவும் சென்றார்கள்.ஒரு சாக்குத் துணியை மட்டும் கெளபீனமாக அணிந்து கொண்டு ஆனந்தமாக ஒரு குட்டித் திண்ணையில் அமர்ந்து இருந்துள்ளார் சுவாமிகள். மலஜலத்திற்குக்கூட அந்த இடத்தை விட்டு எழுந்து செல்லாதவர்.அவ‌ர் மலம் துடைத்துப் போட்ட கற்கள் அங்கேயே காணக்கிடக்கின்ற‌ன. முதல் பார்வைக் குப் பைத்தியத்தைப்போன்ற தோற்றம். 

அப்பாவைப் பார்த்து "யாரு?"என்று கேட்டுள்ளார்.அப்பா ஊர் பேரெல்லாம் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார்.பின்னர்,"திருக்கோயிலூர் சுவாமிகள் அனுப்பினார்" என்றவுடன் "ஆமா!அந்த சாமி கல்லையும் மண்ணையும் கட்டிக்கிட்டு அழுவுது. அதும் வேலையிலே நீ போய் குறுக்காட்டினா உன்ன 'இங்க‌ போ அங்க‌ போ'ன்னு விரட்டி உட்டுடும்.உனக்கு அந்த சாமிதான் சரி. அது விவரமா படிச்சசாமி. நாம சும்மா படிக்காத ஆளு.உன்னப் போன்ற‌ அய்யமாருக்கெல்லாம் உபதேசமெல்லாம் பண்ணத் தெரியாது இதுக்கு"

என்ன சொல்வது என்று தெரியாமல் அப்பா திகைத்து நிற்க, சுவாமிகள் மீண்டும் புதிராகப் பேசியுள்ளர்."ஒரு பொண்ணை மொறையா கலயாணம் கட்டி குடித்தனம் போட்டவன் பேரு என்ன?"

அப்பா:"கிரஹஸ்தன்".

சுவாமி: "அதுசரி! பல பொம்மனாட்டிக் கூட‌ சுத்தறவன் யாரய்யா? அவன் பேரு என்ன?" அப்பா மெளனம் சாதித்துள்ளார்.சுவாமிகள் "சும்மாச் சொல்லய்யா!" என்று கேட்டுள்ளார்.

அப்பா:"நான் அப்படிப்ப‌ட்ட எந்தத் தப்பும் செய்யவில்லையே" என்று கூறித் திகைத்துள்ளார்.

சுவாமிகள்: "அட!போமய்யா! படிச்ச அய்யரு! இதுகூடப் புரியலயா? ஒரு பொண்ணோடு வாழற மாதிரி ஒரு குருவோடதான் இருக்கணும். என்ன சரியா?"

இப்படி சம்பாஷணை நடந்து கொண்டு இருந்த போது, ஒரு பிரமுகர் மகிழ்வுந்தில் வந்து இற‌ங்குகிறார்.

பெரிய கூடையில் பழத்தைக் காரோட்டி எடுத்து வந்து சுவாமிகள் காலடியில் வைக்கிறார். பிரமுகரைப் பார்த்து, "என்னாடா?" என்கிறார் சுவாமிகள்.

"நீ சொன்ன மாதிரியே தேர்தல்ல செயிச்சுப்புட்டேன் சாமி. அதான் உனக்கு சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்"

"எங்கிட்ட ஏன்டா சொல்ற? உள்ளாற இருக்குப் பாரு சாமி, அதுகிட்டப் போய் சொல்லிட்டுப்போ"

பிரமுகர்:"அதான் பேசற சாமி நீ இருக்கச்சொல்ல பேசாத கல்லு சாமி கிட்ட‌ நான் ஏன் போவணும்?"

சுவாமிகள்:"என்னடா சொன்ன!?அது பேசாத கல்லு சாமியா?"

பிரமுகர்:"ஆமா!கல்லு சாமிதானே!?"

சுவாமிகளுடைய முகம் ரெளத்ரமாக மாறிவிட்டது.பிரமுகரைப் பார்த்து அங்கே கிடக்கும் கற்களைக் காட்டி கேட்கிறார்:"இந்தக் கல்லெல்லாம் என்னடா?"

"நீ தொடச்சிப்போட்ட கல்லு!"

"கோயிலுக்குள்ள இருக்கிற கல்லு என்னாடா?"

"நீ சாமின்னு சொல்ற பேசாத கல்லு"

"அதுசரி! இந்தக் கல்லெல்லாம் நீயடா!உள்ளாற இருக்கற கல்லு நானடா!"

பிரமுகரின் பழக்கூடையைக் காலால் எட்டித் தள்ளிவிட்டு சுவாமிகள் மெள‌னமாக முகம் திருப்பிக் கொண்டு படுத்துவிட்டாராம். நீண்ட நேரம் நின்று பார்த்துவிட்டு அப்பாவும் அம்மாவும் ஊர் திரும்பிவிட்டார்கள்.

"எந்தரோ மஹானு பாவலு அந்தரிக்கி வந்தனுமுலு" (சத்குரு தியாகராசரின் கீர்த்தனை)

பொருள்:"எத்தனை மஹான்களோ அத்தனை பேருக்கும் வணக்கம்"

ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK), தஞ்சாவூர்

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...