10 July, 2011

இலவச பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படுகிறது.

தமிழகமுதலவர்
சென்னை, ஜூலை 9: தமிழக அரசின் இலவச பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக 1,600 குடும்பங்களுக்கு பசுவும், 1,600 குடும்பங்களுக்கு ஆடுகளும் வழங்கப்பட உள்ளன.  ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும் இலவசமாக பசு மாடுகளும், ஆடுகளும் வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து, அதிகாரிகள், அமைச்சர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:  வெண்மைப் புரட்சி: குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் தேர்தல்  அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, 60 ஆயிரம் கறவை மாடுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்.  அதன் முதல் கட்டமாக, அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி 1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.  ஜெர்சி பசுக்கள்: இந்தத் திட்டத்தின்கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் எதுவும் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு இந்தப் பசுக்கள் அளிக்கப்படும். இந்த கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கான பயனாளிகள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர்.  பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். பசுக்களை இலவசமாகப் பெறும் பயனாளிகள் முழு திருப்தியடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பயனாளிகளே அரசு அலுவலர்களுடன் நேரடியாக அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் இருந்து பசுக்களை வாங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.  இலவசமாக கொடுக்கப்படும் பசுக்களை காப்பீடு செய்வதற்கும், பசுக்களை அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதற்கும் அரசே நிதியுதவி செய்யும். மேலும், பசுக்களை பயனாளிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அடையாளச் சின்னம் இடவும் அரசு உதவி செய்யும்.  இனி வரும் ஆண்டுகளில் மாநில கால்நடைப் பண்ணைகளில் இருந்தும் இந்த கலப்பின பசுக்களைப் பெறும் வகையில் மாநில கால்நடைப் பண்ணைகளை வலுப்படுத்தவும் அரசு நிதியுதவி செய்யும்.  இலவச ஆடுகள்: ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.  வரும் ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்துக்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும். கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படும் நிலமற்ற ஏழைகளே இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள்.  இலவச பசு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். பயனாளிகளே அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆடுகளை அருகிலுள்ள சந்தைகளில் இருந்து ஆடுகள் வாங்க அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வயதுள்ள ஆடுகளுக்கான விலை, ஆடுகளை பயனாளிகள் இருப்பிடங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும்.  தீவனப் பயிர் பெருக்கத் திட்டம்: இந்த 2 திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி பசுந்தீவனம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.  மாநிலத்தில் கால்நடைத் தீவனப் பயிர் பெருக்கத் திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...