16 August, 2011

பரண் மேல் ஆடு! கை மேல் காசு!!


தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம். இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் "பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை’ இப்பொழுது பிரபலம் ஆக உள்ளது.விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து அறுவடை செய்துவருகிறார்கள்.

ஆடு மாடு மேய்க்கத்தான் லாயக்கு? சொல்பவர் வாயில் ஆப்பு?

தமிழகத்தின் பொருளாதார வளத்திற்கு குறிப்பாக கால்நடை செல்வங்கள் பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. இந்த வரிசையில் ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் தற்போது இந்த தொழிலில் இறங்கி வருவது அதிகரித்துள்ளது. ஆடு மாடு மேய்க்கதான் லாயக்கு என்று கூறியவர்கள் வாயடைத்து வியப்புடன் பார்க்கும் அளவுக்கு நவீன முறை கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் பிரபலமாக உள்ளது.

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு:-
வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கிடைமட்டமாக மரச்சட்டங்களை 4 க்கு 3 அடி இஞ்ச் அளவில் 1 விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. இதன் இடைவெளி அதிகமானாலோ, குறைந்தாலோ ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால்களில் காயங்கள் ஏற்படலாம்.
மேலும் இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மரமும் முக்கியம். சுமார் 100 ஆடுகள் வளர்க்க 50 அடிநீளம், 22 அடி அகலம் உடைய ஒரு கொட்டகை அவசியம். இந்த கொட்டகையில் ஆடு ஈனும் இளங்குட்டிகளை அடைக்கவும் அதனில் ஒரு பகுதி 22 க்கு 15 இஞ்ச் அளவில் அமைத்தல் வேண்டும்.
குட்டிகள் 3 மாதங்கள் வரை தாயிடம் பால்குடிப்பதால் அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க கொட்டில் முழுவதும் அடைத்து இருத்தல் வேண்டும்.

தீவன பராமரிப்பு
பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் தான் முக்கிய பங்களிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தீவனப்பற்றாக்குறையால் தான் வெள்ளாடு வளர்ப்பை சிறந்த முறையில் செய்ய இயலவில்லை. எனவே 100 ஆடுகளை இந்த முறையில் வளர்க்க குறைந்த பட்சம் 4 ஏக்கர் பசுந்தீவனத்திற்கு என ஒதுக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருத்தல் வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் அவசியம்.

பசுந்தீவன வகைகள்
கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள், அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம். இதனை 50 சென்ட் நிலத்தில் ஒவ்வொன்றையும் வளர்க்கலாம். பண்ணை அமைப்பதற்கு முன் பசுந்தீவனங்களை பயிரிட்டு விட வேண்டும். ஏனென்றால், முதல் அறுவடை 60 முதல் 70 நாட்கள் குறைந்த பட்சமும், 80 முதல் 90 நாட்கள் அதிகபட்சமாகவும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகை அமைத்தல் வேண்டும். இதற்கு பின்பே ஆடுகளை வாங்கி வர வேண்டும்.

அடர் தீவனம்
வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும். 3 மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.

அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருக்க வேண்டும்.

மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ, தாதுஉப்பு 2 கிலோ, சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.

நோய் பராமரிப்பு
ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். குறிப்பாக, மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி, ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி, அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும். குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2,3,4,6,9 வது மாதங்களில் போட வேண்டும்.
நன்மைகள்
!வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
!இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
!குறைந்தபட்சம் 100 ஆடுகள் வளர்த்தால், ஆடு ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. எந்த தொழிலையும் அறிவியல் பூர்வமாக மற்றும் அறிவுபூர்வமாக செய்தால் லாபமே!

14 August, 2011

பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!


நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழங்கள் விற்பதை பார்த்து ஏதோ தேவையில்லாதை பார்பதுபோல் அலட்சியமாக பார்த்து செல்வார்கள் .ஆனால் கிராமங்களில்  சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
நாவல் மரத்தின்  இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும்  நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன்  ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.
பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும். 

பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக தரையில் விழுந்த பழங்களை சாப்பிடும் போது இது போன்று நடக்கிறது!

கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என பாடியபடி இந்த பழத்தின் பளபளப்பான கருமை நிறத்தில் மயங்கி சாப்பிடும் சிலருக்கு தொண்டைக்கட்டும் ஏற்படலாம். டோண்ட் ஒரி நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
பழுக்காத நாவல் காய்கள் இருந்தால் விரயம் செய்யாமல் நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.
விதையின் குணங்கள்
நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு( தான் சாப்பிட்டதைதான்) மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.
இலையின் குணம்
நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.
மரப்பட்டையின் குணம்
நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, இரத்த பேதி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். ( ஏன் பெண்களுக்கு மட்டும் எருமை?)குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். எதற்கும் பக்கத்தில் உள்ள பாட்டியை கேட்டுக்கொள்ளுங்கள் இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும் என்கிறார்கள்.

வேரின் குணம்
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்
புரதம் 0.7 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
கால்சியம் 14.0 பாஸ்பரஸ் 15 இரும்பு 1.2 தயமின் 0.03 நியாசின் 0.2 வைட்டமின் சி 18 மெக்னீசியம் 35 சோடியம் 26.2 பொட்டாசியம் 55 தாமிரம் 0.23 கந்தகம் 13 குளோரின் 8 ஆக்சாலிக் அமிலம் 89 பைட்டின் பாஸ்பரஸ் 2 கோலின் 7 கரோட்டின் 48 இனி தெருவில் நாவல் பழத்தை பார்த்தால் வாங்கி ருசிப்பார்த்துவிடுங்களேன்! சீசன் முடியும் முன்!!

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...