26 June, 2011

உங்கள் செல்ல நாய்க்கு போடவேண்டிய தடுப்பூசிகள்!

நன்றிக்கு பெயர் போன,நம்மிடம் விசுவாசமாய் உள்ள நமது வளர்ப்பு நாய்க்கு சில கொடிய நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடவேண்டியது நமது கடமைதானே!

பிறந்த 2 மாதத்திலிருந்தே தடுப்பூசி போடவேண்டும்.அதற்கு பின் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவேண்டும்.
தடுப்பூசி போடுவதற்கு முன் குடற்புழுநீக்கம் செய்திருக்க வேண்டும்.
அட்டவணை:-
வயது
குடற் புழு நீக்கம் செய்யவேண்டிய இடைவெளிகள்
2வாரம் முதல் 3 மாதங்களுக்குள்
7 நாட்களுக்கு இடைவேளியில்
3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்குள்
15 நாட்கள் இடைவெளியில்
6 மாதங்களுக்கு பின்
21 முதல் 30 நாட்கள் இடைவெளியில்
நோய்களும் தடுப்பூசிகளும்:-

1) வெறி நோய்( Rabies):-
நாய்க்கு வரும் வைரஸ் வியாதிகளில் மிகவும் பயங்கரமானது இது. இந்த நோய் மனிதருக்கும் பரவக் கூடியது என்பதால் வராமல் தடுப்பது அவசியம்
முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
வெறி நோய் கொண்ட நாயினால் நமது வளர்ப்பு நாய் கடிப்பட்டால்:
முதல் தடுப்பூசி: ஜீரோ நாள் ( தடுப்பூசி போடும் நாள்)
2ம் தடுப்பூசி : 3ம் நாள்
3ம் தடுப்பூசி : 7ம் நாள்
4ம் தடுப்பூசி : 14ம் நாள்
முதல் பூஸ்டர்: 30ம் நாள்
2ம் பூஸ்டர் : 90ம் நாள்
வெறி நோய் தடுப்பூசிகள்:-
Inj.Rabisin
Inj.RakshaRab
Inj.Pentadog ( 5 தடுப்பூசிகளை உள்ளடக்கியது.)
குறிப்பு: தடுப்பூசி போடவேண்டிய நாள்/அளவு எல்லாவற்றையும் கடிப்பட்ட இடத்தை பரிசோதனை செய்து கால்நடை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

2) டிஸ்டம்ர் ( Canine Distember):-
ஒரு வருடம் வயதுக்கு கீழ் உள்ள நாய்களுக்கு இந்த நோய் அதிகம் வருகிறது.அதிக அளவில் காய்ச்சல், மூக்கில் சளி ஒழுகுதல், இருமல், நுரையீரல் பாதிப்பு, வாந்தி, பசியின்மை, வயிற்றுப் போக்கு,கண்களில் நீர், பாதத்தின் அடிப்பாகம் கெட்டியாகுதல், வயிற்றின் அடிப்பாகத்தில் சிறிய கொப்பளங்கள் என பல வித அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நாய்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கிறது.
முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
டிஸ்டம்பர் நோய் தடுப்பூசிகள்:-
Inj. Candur-DHL ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Canlin DH ( இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Canifa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
In. PentaDog ( 5 வகை நோய் தடுப்பு மருந்துகளை உள்ளடக்கியது.)
3) பார்வோ நோய் ( Parvovirus Infection)
1978 ஆண்டு முதல் இந்த DNA வைரஸ் மூலம் வரும் இந்த பார்வோ நோயினால் பல நாய் குட்டிகள் இறக்கின்றன. அதிகமான காய்ச்சல், பசியின்மை, இரத்தம் கலந்தவயிற்றுப் போக்கு, வாந்தி, என ஒருவகையும், இதயத்தின் சதையை பாதிக்க கூடிய இன்னொரு வகையும் இருக்கிறது.
முதல் தடுப்பூசி : 6 முதல் 7 ம் வாரத்தில்
பூஸ்டர் : 12வது வாரத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
கற்பமடைந்த நாயிற்கு பார்வோ தடுப்பூசி சினையின் போது போடுவதால் பிறக்கும் குட்டிகள் முதல் வாரம் முதல் 7ம் வாரம் வரை இந்த நோய் வராமல் தாயிடம் இருந்து பெற்ற எதிர்ப்பு சக்தி காப்பாற்றுகிறது.
பார்வோ நோய் தடுப்பூசிகள்:-
Inj.Candur-P ( நான்கு வகை நோய் தடுப்பு உள்ளடக்கியது)
Inj. Purvodog
Inj. Megavac 6 ( நான்கு வகை நோய் தடுப்பு உள்ளடக்கியது)
4) எலிக் காய்ச்சல் ( Leptospirosis)
இந்த நோய் இரண்டு வகையான பாக்டீரியாக்களால் ஏற்படும் வியாதி. அதிகமான காய்ச்சல், வாந்தி, காமாலை, சிறுநீரக கோளாறு போன்றவைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நாய்கள்இறந்துவிடுகின்றன.
எலிக் காய்ச்சல் தடுப்பூசிகள்:-
முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
Inj. Candur-DHL ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Leptorab
Inj. Caniffa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
5) மஞ்சள் காமாலை ( Hepatitis)
இது ஒரு வைரஸ் கிரிமினால் கல்லீரலை பாதிக்கும் வியாதி. இதனாலும் பல நாய்கள் இறக்கின்றன.
தடுப்பூசிகள்:-
முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
Inj.Candur-DHL
Inj. Caniffa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Canulin-DH ( இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Bivrovax (இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது
Candur-P (நான்கு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
சுருக்கம்:-
தடுப்பு ஊசி வயது
Inj. Purvodog : 9வது வாரத்தில்
Inj. Candur-DHL : 12வது வாரத்தில்
Inj. Rabisin : 16வது வாரத்தில்
inj. Purvodog : 21வது வாரத்தில்
Inj. Magavac : 24வது வாரத்தில்
இதற்கிடையில் முன்பு அட்டைவணையில் குறிப்பட்டபடி குடற்புழுநீக்கம் செய்திருக்கவேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி:-
Inj.Rabisin தடுப்பூசி பின் ஒரு மாதத்திற்கு பின் Inj. Megavac 6 என்ற தடுப்பூசியை போட்டு நம்மிடம் நன்றி காட்டிய நமது செல்ல நாய்க்கு நாமும் நன்றி காட்டுவோம்.

20 June, 2011

நம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்?


அகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது. ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை! பழங்காலம் முதலே ஒரு துஷ்டப் பறவையாகவே ஆந்தை கருதப்படுவது அதன் துரதிருஷ்டம். யார்வீட்டு மீதாவது ஆந்தை அமர்ந்து கத்தினால், அந்த வீட்டில் மரணம் சம்பவிக்கும் என்ற நம்பிக்கை இன்றும் பரவலாக இருக்கிறது. இதனால்தான் ஆந்தையின்  அலறல் ஒலிக்கு கூட பஞ்சாங்கத்தில் பலன் பார்க்கும் வழக்கும் இருந்து வருகிறது. எத்தனை பெரியார் வந்தாலும் மாற்றமுடியாத மூடநம்பிக்கையாக உள்ளது.

ஸ்ட்ரிகிடே” (Strigidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தைகளில் 200 வகைகள் இருக்கின்றன. இதில் பெரிய ஆந்தை, சின்ன ஆந்தை, புல் ஆந்தை, உமட்டன், சாவுக்  கருவி என 15 வகை இனங்கள் நமது இந்தியப் பிரஜைகள்ஒவ்வொரு வகை ஆந்தைகளும் தனிப்பட்ட ஒலிகளை ஒலிக்கும். அவைகள் யாவும் தன்னுடைய இணைக்கு மேற்படி விஷயத்திற்கு அழைக்கும் ஒலிதான்! மரண அறிவிப்பு இல்லை!!

ஆந்தைகளிலியே கழுகு ஆந்தைகள் தான் மெகா சைஸ்! Eurasian Eagle Owl (Bubo bubo) Blakiston's Fish Owl (Bubo blakistoni) இரண்டரை அடிக்கும் மேல் நீளம், இரக்கையை விரித்தால் 6.6 அடிக்கு மேல், எடையோ 4.5  கிலோ இருக்கும். கழுகாந்தையார் தாக்கினால் குள்ளநரி சைஸ் விலங்குக்கூட இன்டென்சிவ் கேர்யூனிட்டில் அட்மிட் ஆக வேண்டியதுதான். மிகவும் சிறிய சைஸ் ஆந்தையும் இருக்கிறது.Elf Owl (Micrathene whitneyi)  ஒன்லி  30 கிராம் எடைதான்!
ஆந்தைகள் தங்களை அடையாளம் காட்ட,, குரங்குமூஞ்சி, சிறுகுக் கொம்பு, நீளக்காது, ஷட்ரைப்டு சிறகுகள் என்று உறுப்புக்களை வைத்து  பல்வேறு பர்சனாலிடிகள் உண்டு. பெரும்பாலனான ஆந்தைகள்  வட்ட முகம், அதில் முரட்டுச் சிறகுகளாலான இதய வடிவ விசித்திர அலங்காரம், கழுகு போன்ற மூக்கு,, “சந்திரமுகி ஜோதிகாபோன்ற பெரிய கண்களும் ஆந்தைகளுக்கு திகில் தோற்றத்தைத் தருகின்றன.
மங்கலான வெளிச்சத்திலும், இரவிலும் இருட்டிலும் ஆந்தைகள் பிரகாசமாக பார்க்கும். ஆனால் பைனாகுளர் பார்வைதான்! பகலில் சூரியப் பிரகாசம் இதன்  கண்களை கூசச் செய்யும். அப்படியொரு இயற்கை செட்டப் இதற்கு! தூரத்தில் உள்ளவைகளை தெளிவாக பார்க்கும் ஆந்தைகள் மிகவும் அருகில் உள்ளவைகளை பார்க்க இயலாது.

பகல் முழுவதும் தன் கூட்டிலோ, மரக்கிளையிலோ உட்கார்ந்து பாதிக்கண்களை மூடியபடி அரைத்தூக்கத்தில் கழிக்கும். இரவு வந்து விட்டால் புத்துணர்ச்சி பெற்று, சீவி சிங்காரித்து தொழிலுக்குக் கிளம்பி  விடும். சகட்டு மேனிக்கு இரை தேடுவது தான் ஆந்தையின் முக்கிய தொழில்! சில வகை ஆந்தைகள் பகலிலும் வேட்டைக்கு கிளம்பிவிடும் Burrowing Owl (Speotyto cunicularia), Short-eared Owl (Asio flammeus). தன்னுடைய நாசர்அலகால் கொத்தி, கத்திரிக்கோல் அசைவு போல் இரண்டு அலகுகளையும் அசைத்து ஸ்வாக செய்துவிடும் தன் இரையை! ஆந்தையால் விழுங்கப்படும் ஜீவராசிகளின் முடி, சிறகு, எலும்பு, மண்டை ஓடு எதுவும் ஜீரணிக்கப்படுவதில்லை. வயிற்றுக்குள்ளேயே சின்ன உருண்டைகளாக்கி நாசூக்காக வெளியே தள்ளி விடும். ஆந்தையின் வசிப்பிடத்தில் இந்த ஜட்டங்களைக் கொண்ட உருண்டைகளை நிறைய பார்க்கலாம்.
மற்ற பறவைகள் போல் தன் கூட்டைக் கூட கலைநயத்துடன் அமைக்க ஆந்தைகள் ஆர்வம் கொள்வதில்லை, அவ்வளவு சோம்பேறித்தனம்பாழடைந்த  மண்டபம், கோபுரம், இடிப்பட்ட வீடு, குகை,மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் மரங்களின் பொந்துகள் என அரைகுறை வீட்டை வசந்தமாளிகையாக நினைத்து வாழும்.

இவற்றின் மெனு கார்டில் தவளை, வவ்வால், குருவி, நத்தை, பூச்சிகள் என பல ஐட்டங்கள் உண்டு.இதைவிட ஆந்தையின் ஆசை உணவு, அதன் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும் விருந்து எலிதான். இரண்டும் இரவுவாசி என்பதால் அப்படியொரு ஏழாம் பொருத்தம். ரொம்ப உயரத்திலிருந்தே  சின்ன சுண்டெலியின் நடமாட்டத்தைக் கூட ஆந்தையார் கண்காணித்து விடுவார்

ரோமம் போன்ற சிறகுள் மிருதுவாக இருப்பதால் சத்தம்மில்லாமல் பறந்து வந்து உணவின் மீதே லேண்டிங் ஆவார். மீன் பிடித்து சாப்பிடும் ஆந்தைகளும் உண்டு. வெளிச்சத்தால் கவரப்படும் விதவிதமான பூச்சிகள், ஆந்தையின் டிபன். இதற்காகவே லைட் கம்பத்தில் வெயிட் செய்து கண்ணில் படுகிற பூச்சிகளை எல்லாம் டேஸ்ட் பார்த்துவிடும். உட்கார்ந்த பொசிஷனிலேயே நாலா பக்கமும் தலையைத் திருப்பி நாட்டு நடப்புகளை கவனிப்பதில் கில்லாடி  ஜூனியர் விகடன்” ? 270 டிகிரி கோண இதன் தலையசைப்பை சில நிமிடம் பார்த்துகொண்டிருந்தால் ஹிப்னாடிசம் செய்தது போல நமக்கே தலை சுற்றும்.
ஆந்தைகள்  தம் காதல்களை பிறந்த 6 மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகின்றன். பகலில் விழித்து, வேலை பார்த்துக் களைக்கும் மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கு இரவில் தாம்பத்தியக் கொண்டாட்டம் வழக்கம். ஆனால், இரவில் பிசியாக இருக்கும் ஆந்தைகள், இனப்பெருக்கத்தை பகலில் வைத்துக் கொள்வதில்லை. வேலையோடு வேலையாக இரவில்தான்! ஆண் ஆந்தை உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு எங்கோ இருக்கும் வித்தியாச கிறக்கத்தில் இந்த அழைப்பு இருப்பதால் காதலியும் புரிந்து கொள்வாள். ஏக்கத்தோடு பதில் கானம் புறப்படும். முடிவில் டூயட்தான்.
இரண்டு நிமிட  டூயட்டுக்குப் பின் கதகதப்பாய் அருகருகே உரசியபடி அமர்ந்து கொண்டிருக்கும். இதில் காதல் நெருப்பு வேகமாகப் பற்றிக் கொள்ள, கூச்சத்துக்கும் குறைவிருக்காது. அதே நேரம், கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், அலகால் செல்லாமாய் உடம்பு முழுவதும் முத்த மழை பொழியும். சட்டென்று சிறுகுகளை சிலுப்பி தோற்றத்தில் அழகைக் கூட்டும். சில அடி உயரம் எம்பி எம்பிப் பறந்தபடி பாட்டு பாடிக் கொண்டு பின் இணை சேரும். ஆந்தை தன் கூட்டில் மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை வீதம் ஏழு முட்டைகள் போடும். ஐந்து வாரங்களில் முட்டைகள் பொறித்து வெளிப்படும் குஞ்சுகள் வெவ்வேறு தினுசுகளில் இருக்கும்

ஒரு ஆந்தை ஜோடி நீண்ட காலம் ஆளை மாற்றாமல் இருப்பதால் குஞ்சுகளை மூன்று மாதங்கள் பாசமாமாக வளர்க்கும் என்கிறார் சென்னிமலை டாக்டர். ஆர்.கோவிந்தராஜூ.

16 June, 2011

மாவட்ட ஆட்சித் தலைவர் மகள் அரசு தொடக்கப் பள்ளியில் அட்மிஷன்!

உயர் அதிகாரிகள், அரசியல்வாதி ஆகியோரின் குழந்தைகள் அந்த நகரில் உள்ள பிரசித்தமான கான்வென்ட் பள்ளியில் படிப்பதுதான் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 3ம் தேதி பதவியேற்ற ஆனந்தகுமார் தன்னுடைய தீபிகா என்ற பெண் குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதற்காக ஈரோடு குமலன் குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தன் பெண் குழந்தை கோபிகாவுடன் சென்றார்.
நடுவில் உள்ள பெண் கலெக்டர் மகள் கோபிகா!
      அங்கு மாணவர் சேர்க்கைக்காக ஏராளமான பெற்றோர் குவிந்திருந்ததால் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ஆனந்தகுமார் அவர்களும் காத்திருந்தார். அப்பொழுது, மாணவர் சேர்க்கையை தொடங்கி வைக்க வந்திருந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், கலெக்டர் தனது மகளை பள்ளியில் சேர்க்க வந்திருக்கும் தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்து அவரையும் குழந்தையும் பள்ளிக்குள் அழைத்து சென்றார்.
      பள்ளி தலைமை ஆசிரியை மாவட்ட ஆட்சி தலைவர் மகள் கோபிகாவுக்கு 2ம் வகுப்பு அட்மிஷன் போட்டார்! ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளியின் வளர்ச்சிக்காக புரவலர் திட்டத்துக்கு தனது சார்பிலும், மனைவி சார்பிலும் தலா ரூ.1000/- வழங்கியும் பிரமிக்க வைத்தார்!!
      பள்ளியில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு  மட்டும்  சீருடைகள் வழங்கப்படுகிறது என்ற தலைமை ஆசிரியையிடம் மாவட்ட ஆட்சிதலைவர் ஆனந்தகுமார் தனது குழந்தையும் சத்துணவு சாப்பிடுவார் அவருக்கும் சீருடை வழங்குங்கள் என கூறி கம்பீரமாக சென்றவரை, தலைமை ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் பெற்றோர்களும் ஆச்சரியமும் ஆனந்தமும் கலந்த பெருமிதத்துடன் பார்த்தார்கள்!
      மாவட்ட ஆட்சி தலைவர்ஆனந்தகுமார் இதற்கு முன் தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவராக பணிபுரிந்து தற்பொழுது ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவராக பதவியேற்றுள்ளார். இவர் அடிப்படையில் கால்நடை மருத்துவர்! ஒரு முதுநிலை கால்நடை மருத்துவ பட்டதாரி !! கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரிந்த பொது இந்திய ஆட்சி பணி தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று தற்பொழுது மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். ஆனந்தகுமார்!! என்பது கூடுதல் செய்தி. கால்நடைமருத்துவர் என்பதில் நாங்களும் பெருமை அடைகிறோம்!

12 June, 2011

ஒட்டசிவிங்கியின் கழுத்தும் காதலும்!


அலாதியான கழுத்துக்கென்றே பெயர் பெற்ற உயிர் ஒட்டகச்சிவிங்கி. கி.மு.40-ம் ஆண்டு முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு ஜூலியஸ் சீசரால் அறிமுகமானதுதான் இது.பாலூட்டி வகைகளில் மிகவும் உயரமான இனம் ஒட்டகசிவிங்கி! இதன் அறிவியல் பெயர் (Giraffa camelopardalis)   ஜிராஃபிடே குடும்பத்தை சார்ந்த (Giraffidae) ஒட்டகசிவிங்கி 18 அடி வரை வளரும். 900 கிலோ வரை எடை இருக்கும். ஒட்டகத்தின் உடல் அமைப்பு தோலில சிறுத்தையின் டிசைன் என்று கலந்து இருக்கும். அதனாலேயே இது ஒட்டகமும் சிறுத்தையும் சேர்ந்ததால் ஏற்பட்ட கலப்பு இனமா? என்று கூட ஆரம்பத்தில் ஒட்டகத்தின் கற்பை பற்றி தவறாக நினைத்தார்கள்.ஆனால் அப்படி இல்லை! ஒட்டகசிவிங்கி ஒரு தனி இனம் தாம்!! ஆணை விட பெண் ஒட்டகசிவிங்கி உயரம் , எடை குறைவாக இருக்கும்.

ஒட்டகசிவிங்கிகளின்  கழுத்து எந்த விலங்குக்கும் இல்லாதா சிறப்பாக 10 அடி இருக்கும். இதை நினைத்து அதிகமான கழுத்து எலும்புகள் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு! இதற்கும் கழுத்து எலும்பு (Neck Vertebrae) 7 எண்ணிக்கை மட்டும்தான்.( எலி முதல் மனிதன் அனைத்துக்கும் எழு எண்ணிக்கைதான்) இந்த சிறப்பு அமைப்பிற்கு என்ன காரணம் என்று 200 ஆண்டுகளாகவே ஆராய்ச்சியாளர் ஒட்டகசிவிங்கயின் கழுத்தை அன்னாந்து பார்த்து, பார்த்து   ஆராய்ந்தும் ஒரு தெளிவான விளக்கத்தை கூற முடியவில்லை.  ஏகப்பட்ட முரண்பாடுகள்! ஆராய்ச்சியாளர்களுக்கு கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்

ஒட்டகசிவிங்கியின் மூளை இதன் இதயத்திலிருந்து 10 அடி உயரம் உள்ளதால் மூளைக்கு ரத்த்த்தை செலுத்த மற்ற பாலூட்டிகளை விட இரண்டு மடங்கு அளவில் இரத்தத்தை வேகமாக இதயம் பம்ப் செய்கிறது. இதயத்தின் எடை 10 கிலோ ! நீளம் 2 அடிகள்!! மேலும் இரத்தம் கழுத்திலிருந்து கீழ் இறங்கமால் இருக்க கழுத்து இரத்த நாளத்தில் ( Jugular Vein)  7 எண்ணிக்கை சிறப்பு வால்வுகள் இருக்கின்றன்.எளாஸ்ட்டிக் இரத்த நாளம்! அதே சமயத்தில் கழுத்தின் மேல் பகுதியில் ஒட்டகசிவிங்கியின் தலை தரை பகுதிக்கு வரும்போது அதிகம் இரத்தம் மூளைக்கு செல்லாமல் இருக்க ரெட்டி மிர்ரபைல்( rete mirabile) என்ற  அமைப்பும் உள்ளது. இந்த ஹைடெக் வசதி எந்த ஜீவனித்திடமும் இல்லாத ஒரு அமைப்பு. இந்த அமைப்பை ஆராய்சி செய்து நாஸா (NASSA) விஞ்ஞானிகள் விண்வெளியிலிருந்து வீரர்கள் திடீரென இறங்கும் போது இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உக்தியை கண்டுபிடித்தார்களாம்

இதன் உடலில் வரையப்பட்டுள்ள மாடர்ன் ஆர்ட் போல உள்ள டிசைன்கள் அழகோ  அழகு! ஒரு ஒட்டகசிவிங்கிக்கு இருக்கும் மற்றொன்றுக்கு இருக்காது! ஃபிங்கர் பிரிண்டு போல யுனிக்!  வனத்தில் வாழும் ஒட்டகசிவிங்கிகள் எதிரிகளுக்கு பயந்து படுக்கவே படுக்காது. தூங்குவதல்லாம் நின்றுகொண்டேதான்! அதுவும் குட்டி தூக்கம் தான்! கழுத்தை வளைத்துகொண்டு  5 நிமிடங்கள் மட்டுமே இதன் தூக்கம்மொத்தத்தில் ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே கண் அயரும். இதன் கண்கள் மிகவும் கவர்ச்சி! சிநேகாவின் கண்கள் கூட இதன் கண்களை காணும்போது அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு ஓடியே விடும்!
வனத்தில் வாழும் ஒட்டகசிவிங்கி 25 முதல் 28 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
ஒட்டகசிவிங்கி ப்யூர் வெஜிட்டேரியன். இலை, தழைகள் இதன்  முக்கிய மெனுவாக இருக்கிறது. (ஆப்பிள் கிடைத்தால் அன்று அதற்கு விருந்து! இதற்கு பிடிக்காத  பழம் வாழைப்பழம்.) இவைகளை வளைத்து இழுத்து சாப்பிட இதன் நீண்ட கழுத்தும், நெடிய கரிய நாக்கு பயன் படுகிறது. பெண்கள் பொறாமைப்படும் அளவுக்கு 18 இஞ்ச் நீளம்! கருவேலம் மரத்தில் உள்ள முட்கள் கூட இதன் நாக்கை காயப்படுத்தமுடியாத அளவில் நாவன்மை கொண்டது. இதனுடைய மேல்  உதட்டை சகல திசைகளிலும் ஒரு கருவியாக இயக்கி தன் நாக்கையையும் நாலாபக்கமும் சுழற்றி இலைகளையும், மொட்டுகளையும் நறுநறுக்கென்று ஒருகட்டு கட்டிவிடும். அடிக்கடி இதற்கு பசி எடுப்பதால் ஓயாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். ஒரு நாள் 70 பவுண்டு  எடை உணவு உள்ளே போய்விடும். இரவில் சாகவாசமாக அசைப் போடும்! இதன் திசுக்களில் தண்ணீரை சேமித்து வைக்கும்  அமைப்பு உள்ளதால் நீர் இல்லாமல் நீண்டநாட்கள் கூட இருந்துவிடும். தண்ணீர் சேமிப்புத் திட்டம்?

ஒட்டகசிவிங்கி உயரம் காரணமாக  இதன் எதிரிகளை தொலைவிலேயே கண்டுபிடித்துவிடுகிறது. பொதுவாக இது வேகமாக ஓட இதன் கால் அமைப்பு அதிகம் ஒத்துழைக்காது. ஓடும் வேகத்தை விட தட தடவென்ற சப்தம்தான் அதிகம் இருக்கும். இதன் பின்னங்காலைவிட முன்னங்கால் உயரம் அதிகமாக இருக்கும். இதனுடைய நடக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். முதலில் இடது பக்க கால்களை முதலில் ஒன்றாக  முன் வைக்கும் பிறகு வலது கால்களை ஒரே  சமயத்தில் முன்னோக்கி வைத்து நடந்து செல்லும்.ஆனால் எதிரிகளிடம் இருந்த தப்பிக்க இது 60 கிலோமீட்டர் வேகம் வரைகூட  ஓடுகிறது. ஓடும் போது  முன்னங்கால்களை முதலிலும் பின்னங்கால்களை அதன் பின்னும்  செலுத்தி ஒடும் அப்பொழுது பறப்பது போல் தெரியும்.  இவைகள் 19அடி உயரம் இருந்தாலும் 2 அடி உயரத்தைக் கூடத் தாண்ட முற்படாது. மேலும் நீச்சலிலும் இவை படுவீக் என்பதால் நீரில் இறங்கவே இறங்காது.
 எது எப்படியோ, வான் உயர்ந்த கழுத்தால் உயரமான மர இலைகள் ருசித்து பெருமை பட்டாலும் இது நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க படாதபாடு படும். முன்னங்கால்கலை அசிங்கமாக அகல விரித்து தள்ளாடியபடி குடித்துக் தொலைக்க வேண்டியிருக்கும். இதனால் நீர் கிடைக்கும் போது தேவைக்கு அதிகமாகவே குடித்து சேமித்து வைத்துக்கொள்ளும். இதன் முக்கிய எதிரியான சிங்கம் இந்த சமயத்தைதான் தன் தாக்குதலுக்கு பயன்படுத்திகொள்ளும். அதனால் ஜோடியாவே பல சமயங்களில் நீர்அருந்தும் ஒன்று குடிக்கும் போது மற்றொன்று எதிரிகள் யாரேனும் வருகிறார்களா என நோட்டமிடும்! இதனுடை வழுவான கால்களால் ( High density Bone) தற்காப்புக்காக உதைக்கும் போது சிங்கத்தையே கொன்றுவிடும்!!  அந்த  அளவுக்கு தாக்குதல் கடுமையாக இருக்கும். தன்னுடைய குட்டிகளை வேட்டையாடவரும் விலங்குகளுக்கும் இந்த கிக் பாக்ஸிங் டெக்னிக்தான்! கழுதை போல் இல்லாமல் இவைகள் உதைப்பதற்கு முன்னங்கால்பின்னங்கால் இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தும் திறன் படைத்தது.
ஒட்டகசிவிங்கி ஊமை என்று  கூறுவார்கள்! அது உண்மையில்லை. அமைதியான விலங்கு,சப்தம் அதிகம் செய்யாது. ஆனால் ஒரு வகையான முக்கல்,முனகல், முறுகல், கீழ்தாயில் சப்தம், இருமல், புல்லாங்குலல் வாசிப்பு,பன்றி உறுமல்   போன்ற சப்தம் என பல ஒலிகளை வெளிப்படுத்துகிறது. ஆண் பெண்ணை அழைக்க இரும்மல் சப்தம், பெண் தன் குட்டியை அழைக்க விசில் போன்ற சம்தம், குட்டிகள் ஒரு வகையான மியாவ் சப்தம் செய்து மொழிகளை பரிமாறிக்கொள்கிறது. ஒரு  சூடான ஆராச்சியில் ஒட்டகசிவிங்கிகள் அல்ட்ரா சவுண்ட் மூலம் தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்கிறது என கண்டுபிடித்துள்ளார்கள்
 ஆண் பெண் என பேதம் இல்லாமல் ஒட்டசிவிங்கிகளுக்கு இரண்டு எலும்பினால் ஆன குட்டை கொம்புகள் தோலால் போர்த்தப்பட்டு பக்குவமாக இருக்கின்றன். ஆண் ஒட்டகசிவிங்கிக்கு பெரிய கொம்பு, அதில் குஞ்சம் இருக்காது! பெண் ஒட்டகசிவிங்கிக்கு சிறிய கொம்பு! அதில் குஞ்சம் போல் முடி அலங்காரம் இருக்கும். பிறக்கும் போதே கொம்புகளோடு தோன்றும் விலங்கினம்! சிலவற்றிற்கு கொம்பிற்கு நடுவில் எக்ஸ்ட்ரா இருக்கும்! இது கிழட்டு ஒட்டகசிவிங்கி என அர்த்தம்!!
ஒட்டகசிவிங்கியின் உடலில் உள்ள முடிகளில் உள்ள சிறப்பு இராசாயனம் கிரிமி நாசினியாகவும் ஒட்டுண்ணிகள் மற்றும் பேண்களிடமிருந்து காக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன. 11 வகையான வாசனை வேதியல் பொருள்கள்  இதன் முடியில் இருந்தாலும் இன்டோல் மற்றும் 3- மெத்திலின்டோல் ( indole and 3-methylindole)   வேதியல் பொருள்கள்தான் ஒட்டகசிவிங்கியின் மேல் உள்ள வாசனைக்கு காரணமாக அமைகிறது.. ஆண் ஒட்டகவசிவிங்கின் உடம்பில் வாசனை அதிகம்! பெண் ஒட்டகசிவிங்கியை கவரத்தான்!
இனவிருத்திக் காலம் ஜூனில் தொடங்கி செப்டம்பரில் தான் முடியும். பெண் வாடையால் ஈர்க்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கியார் கீச்..கீச்...” என்பறு லோ வாய்சில் முனகிக் கொண்டிருக்கும், பெண் ஒட்டகசிவிங்கி சிறுநீர் விட்டால் ஆண் ஒட்டக சிவிங்கி ஓடோடி வந்து அதை ருசி பார்த்துவிடும். சிறுநீர் வரா விட்டாலும் பெண் ஒட்டகசிவிங்கியின்   அந்தபுர பகுதியை தூண்டி வர வைத்துவிடும்! ஆண் ஒட்டகசிவிங்கி சிறுநீரின் ருசி பரிசோதனையில் எந்த பெண் ஒட்டகசிவிங்கி ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் ஆதிக்கத்தில் கலவிக்கு தயாராக உள்ளது என எளிதில் எந்த லேபுக்கும் அனுப்பாமலேயே கண்டுபிடித்துவிடும்! பின் தன் இச்சைக்கு இணங்க வைக்கும் அடுத்த வேலையை ஆரம்பித்துவிடும். ஆனால் வேறுவோரு ஆண் ஒட்டகசிவிங்கியும் ருசிப்பார்த்து போட்டிக்கு வந்துவிடும்.
 அப்பொழுது பெண் ஒட்டகசிவிங்கி தன்னோடு இணைய நினைக்கும் இரண்டுக்கும் கழுத்து போட்டி நடத்தும்.ஆண் ஒட்டகசிவிங்கிகள் கழுத்தை கொண்டு மல்யுத்தம், வாள் சண்டை  செய்வதை பெண் ஒட்டகசிவிங்கி ஆனந்தமாக ரசித்து அதில் வெற்றி பெறும் வீரனோடு இணை சேர தனியாக ஓரங்கட்டி, முதலில் நேருக்குநேர் முகத்தோடு முகம் உரசிக் கொள்ளும் பின்னர் இனச்சேர்க்கை இனிதே நடந்தேரும்! என்கிறார் டாக்டர். "மன்மதன்" சந்திரசேகரன்
50% ஆண் ஒட்டகசிவிங்கிகள் கழுத்தோடு உரசி சண்டையிடும் போது முடிவில் அது ஹோமோ செக்ஸில்  முடிந்துவிடுகிறது. கழுத்துபகுதி நரம்பு மண்டலம் ஒட்டக சிவிங்களின் செக்ஸ் உணர்வை தூண்டிவிடுகிறது! பெண் ஒட்டகங்களிடையே 1% தான் லெஸிபியன் செக்ஸ் நடைபெறுகிறதாம்.
 கலவிக்கு பின் பெண் ஒட்டகசிவிங்கி 400 முதல் 460 நாட்கள் கற்பத்திற்கு பின்  மெத்தென்று இருக்கும் இடத்திலில் பின்னங்கால்களை விரித்து நின்று கொள்ளும். சுமார் 7 அடி உயரத்திலிருந்து  தொப்புகுட்டியென்று 6 அடி உயரம் உடைய ஒரு குட்டியை கீழே போட்டு பிரசவிக்கும்.  பெற்றெடுக்கும். சில சமயங்களில் இரட்டை குட்டிகளையும் போடும். 20 நிமிடத்தில் பால் குடிக்கத் தொடங்கும். ஆண் ஒட்டகசிவிங்கி குட்டியை வளர்ப்பதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை என டாட்டா காட்டி கிளம்பிவிடும். பெண் ஒட்டகசிவிங்கி தன்னோடு வைத்து 18 மாதங்கள் வரை வளர்க்கும். தாய் ஒட்டகசிவிங்கிகள் எல்லாம் வெகு தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தால் ஒரு தாய் ஒட்டகசிவிங்கியை ஆயாவாக நியமனம் செய்து அனைத்து குட்டிகளையும் இதன் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றுவிடும். குட்டிகளை இரையாக்க முயலும் சிங்கம், புலி, சிறுத்தை, நரி போன்றவற்றிலிருந்து காப்பாற்ற இந்த ஆயா ஒட்டகசிவிங்கி உதை விடுவதில் வல்லுனராக இருந்து காப்பாற்றும்.





09 June, 2011

கொலைகார “மைசூர்” யானையை கட்டுபாட்டில் கொண்டு வந்தது எப்படி?


அடர்ந்த காட்டு பகுதியிலிருந்து சில சமயங்களில் மனிதர்கள் வசிக்கும  பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்வதுண்டு. ஏன் நாம் வளர்க்கும் அல்லது கோயில் யானைகள் கூட சில நேரங்களில் மதம் பிடித்து மனிதர்கள்,கால்நடைகள் என கண்ணில் தெரியும் அனைத்தையும் துவம்சம் செய்யும் இயல்பை கொண்டுள்ளது.

யானையில் கட்டுபாடில்லா வன்முறையை பார்க்க பார்க்க மனம் பதைத்து வனத்துறை என்ன செய்கிறது? கால்நடை மருத்துவர்கள் இதை தடுக்கக்கூடாதா? என ஆதங்கத்தில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.இருப்பினும்
இந்த ஆக்ரோஷ யானையை பாக்யராஜ் பாணியில் ஒரு பெண் யானையை கொண்டு வந்து முன்னால் நிற்க வைத்து சமாதான படுத்தலாம் என்றால் இயலாது!
தமிழ் பட ஹீரோ போல் பட் பட் என சுட்டுவிடலாம் என்றால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் தன் தலையை நுழைந்துவிடும்.
பொதுமக்கள் உள்ளே நுழைந்த யானையை கல் எறிவது, தாரை தப்பட்டை என அதிக சப்தம் ஏற்படுத்துல் போன்ற காரியங்களை செய்யாமல் வீட்டினுள்ளேயே இருப்பது மிகவும் நல்லது. இப்படிப்பட்ட யானைகள் பதற்றதுடனும், காட்டை விட்டு வந்த இனம்புரியாத  பயம் எல்லாம் சேர்ந்து மிகவும் கோபமாக இருக்கும். எனவே அதை மேலும் கடுப்பேற்றாமல் அமைதியாக இருக்கவிடுவது நல்லது. யாரேனும் மாட்டிக்கொண்டால் மனிதாபிமானம் என்று அதிக படி ஆர்வத்தில் அவர்களை காப்பாற்ற முயலவேண்டாம். யானை அவர்களை தூக்கிகொண்டே காப்பாற்ற வருபவரையும் தாக்கிவிடும். 40 கிலோ மீட்டர் வேகத்தில் நடந்து ( ஓடி ) எட்டி பிடித்து விடும். இக்கட்டான தருணம் ஏற்பட்டால் முடிந்த வரை அருகில் மரம் அல்லது உயரமான மதிலில் ஏறிக்கொள்ளவேண்டும். அந்த நேரத்தில் பொதுவாக யானைகள் தன் கண்பார்வையின் நேர்கோட்டில் உள்ளவைகளையே அதிகம் தாக்கும். அன்னாந்து பார்த்து தாக்காது! என்கிறார் வனத்துறையில் பல ஆணடுகள் பணிபுரிந்த  அனுபவம் உள்ள திரு. P.R. மணி அவர்கள்!
மேலும் அதன் கண்பார்வை அதனுடைய உயரம் 6 அடி முதல் 8 அடி வரை இருக்கலாம்.அதை அனுமானித்து அந்த உயரத்திற்கு மேல் ஏறி கொள்வது நல்லது. எனக்கு மரம் ஏற தெரியாதே என்றாலும் எதற்கும் முயற்சி  செய்து பாருங்கள் அந்த சமயத்தில் அட்ரினலின் நன்றாக வேலை  செய்தால்  மள மளவென்று மரம் ஏற முடிந்தாலும் முடியும்! ஆனால் இறக்கி விடத்தான் யாரேனும்  வரவேண்டும்! உயரம் குறைவாக இருந்தால் யானையே இறக்கி விட்டுவிடும்!? சில தைரியமான மலைவாசிகள் படுத்த நிலையில் உருண்டு உருண்டே தப்பியிருக்கிறார்களாம்? சரியாக தலையை குனிந்து தந்தத்தாலோ தலையினாலோ தரையோடு சேர்த்து அழுத்த வரும் போது உருண்டு நகர்ந்துவிடவேண்டும்! என்கிறார். மேலும் அதுக்கு தைரியம் வேணுமே!

வனத்துறைக்கு தகவல் கிடைத்ததுமே ( அவர்கள் யானைதானே) வனத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் வன கால்நடை மருத்துவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தன் திட்டத்தை வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். மயக்க ஊசி மூலம் பிடிப்பதற்கு அல்லது கட்டுபடுத்துவதற்கு அந்த யானை ஆரோக்கியமாக உள்ளதா? வயது? ஆணா, பெணா? இதன் எடை என்ன? என்ன வகையான மருந்தை உபயோகப்படுத்தலாம்? என்ன அளவு மருந்தை செலுத்தலாம்? எந்த வகை ஊசி செலுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தலாம்?   என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு டேட்டா ஷீட்டில் பதிவு செய்து குழுவினால் ஒப்புதல் பெற வேண்டும். ஏனென்றால் மயக்கம் மருந்து ஓவர் டோஸ்  ஆனால் யானை குளோஸ்! குழுவும் நிறைய விசாரணைகளை  சந்திக்க வேண்டிருக்கும்! ஏன் சிறை தண்டனையை கூட கிடைக்க வாய்ப்புளளது!

நோயுற்றுள்ளது , எலும்பும் தோலாக பலகீனமாக இருத்தல்சினையாக உள்ளது  என அறியப்பட்டால் மயக்கம் மருந்து திட்டம் கிடப்பில் போடப்படும். அந்த பகுதியில் வெட்பநிலை 35o C க்கு மெல் இருந்தாலோ 10oc க்கு உள் இருந்தாலும் மயக்க மருந்து கொடுப்பது பிடிப்பதில்லை. அதிகம் வெப்பம் உள்ள நிலையில் மயக்க மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தி யானையின் உடல்  முழுவதும் கொப்பளத்தை ஏற்படுத்திவிடும்.  மேலும் மயக்க மருந்திற்கான மாற்று மருந்து மனிதருக்கு மற்றும் விலங்கிற்கும்   ( Antidote) கைவசம் தயாராக இருக்கவேண்டும். யானைக்கு கொடுக்கும்  மயக்க மருந்நு M-99 IMMOBILON  ( Etrophine Hydrochloride + Acepromazine) போன்ற மருந்துகளை கையாலும்போது  கண்களில் சிறு துளி பட்டாலும் மரணம் தான். மேலும் மயக்கம் அடைந்த யானையை மீண்டும் பழைய நிலைக்கு உடனடியாக கொண்டு வர விலங்கிற்கான மாற்று மருந்தும் அவசியம் தேவைப்படுகிறது. யானை மயக்கம் அடைந்து விழும்போது பக்கவாட்டில் விழுந்தால் பல  மணி நேரம் கூட விடலாம். ஆனால் நெஞ்சு பகுதியை (Sternal Recubancy) அடியில் வைத்து விழுந்து கிடந்தால் 20 நிமிடங்களில் மாற்று மருந்து கொடுத்து யானையை எழுப்புவது அவசியம். இந்த நிலையில் யானைகள் மூச்சு திணறி இறந்துவிடுகிறது. எந்த நிலையில் இருந்தாலும் உடனடியாக மாற்று மருந்து கொடுப்பது அவசியம். நார்கன் (Norcan) என்ற மருந்து மனிதர்களின் மாற்று மருந்தாகவும் டைஃபிரிநார்ஃபின் ( Diprenorphine) ) என்ற மருந்து விலங்கின் மயக்க மருந்து மாற்று மருந்தாக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
M-99 IMMOBILON( Etrophine Hydrochloride + Acepromazine) மயக்க மருந்தை டோஸ்க்கு தகுந்தார்போல் எந்த டார்ட் (Dart) என முடிவு செய்யவார்கள். இந்த பச்சை நிற டார்ட் மூன்று வகையாக உள்ளது. 1மிலி முதல் அதிக பட்சம் 15 மிலி வரை போட  டார்ட உள்ளது. துப்பாக்கிக்குள் வைக்கும் சிரிஞ்சை தான் டார்ட் என்கிறார்கள். மருந்தை செலுத்துவற்கு பிரத்தியேகமாக உள்ள   துப்பாக்கி ( Dist- inject Riffle Model N ) தெரிவு செய்யப்பட்டு எவ்வளவு தூரத்திலிந்து மருந்தை சுடபோகிறோம் என முடிவு செய்து அதற்கு தகுந்தாற்போல் குண்டை ( Catridges) தேர்ந்தெடுக்கபடும். கேட்ரஜ் நான்கு வகைகளில் வருகிறது. பழுப்பு நிறம் 10-20 மீட்டர் வெள்ளை நிறம் 30-40 வரை கருப்பு நிறம் 40-50 மீட்டர் ஆரஞ்சு நிறம் 50-60 மீட்டர் வரை செலுத்தக்கூடியது. யானையின்  மனநிலை செலுத்துவரின் குறிபார்க்கும் திறமையைகொண்டு கேட்ரஜ் தெரிவுசெய்யப்படுகிறது. குறிபார்க்கும் திறமையை பரிசோதித்துக்கொள்ள 5 டம்மி ஊசிகளும் மருந்துடன் வருகிறது. இதை வைத்து தூரத்தில் உள்ள கொல்லை  காட்டு பொம்மையில் பயிற்சி செய்துகொண்டு யானையை கட்டுபடுத்த ரைஃபில் உடன் கிளம்புவார்கள்ஏனேன்றால் M-99 மருந்து 1 மிலி ரூ 1000/- ஒரு பெரிய யானைக்கு 4 மிலி மருந்து செலுத்தவேண்டிஇருக்கும. மருந்தை தோள்பட்டை அல்லது பின்புறத்தில் அடிக்கவேண்டும். 6 நிமிடங்களில் யானையின் வேகம் குறையும், நடை தடுமாறும்,, ஆண் யானையா இருந்தால்  இதன் ஆண்குறி ரிலாக்ஸ் ஆகி வெளியே தொங்கி விடும்! பிறகு விழுந்து விடும்.   உடனடியாக வக்கை மரத்து பட்டையில் செய்யப்பட்ட வடத்தில் யானையின் கால்கள் கட்டப்படுகிறது. இந்த கயிறுதான் யானைகளை கட்ட பயன்படுத்துகிறார்கள்! பின் மயக்க மாற்று மருந்து செலுத்தி யானையின் மயக்கம் போக்கப்படுகிறது! M99 மருந்து கிடைக்காத போது ஜைலசின் ( Xylazine) யானைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் கொஞ்சம் தாமதமாகதான் மயக்கம் ஏற்படும் அதுவும் முன்பே யானை பதற்றத்தில் இருந்தால் மயக்கம் வருவதற்கு 4 மணிநேரம் கூட ஆகிவிடும்.
மயக்க மருந்து கொடுக்கமுடியாத நிலையில் இருந்தால் நான்கு கும்கி யானைகளை கொண்டு வந்து நாலாபக்கமும் சூழ்ந்து  இந்த அட்டகாச யானையை கும்ம வேண்டியதுதான்! சில சமயங்களில் கும்கியின் குத்துகளை தாக்குபிடிக்கமுடியால் இறந்தேவிடுவதும் உண்டு! கும்கி யானைகளைப் பற்றி வேறுவொரு நாள் பார்ப்போம்!

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...